\

கிரிக்கெட்டின் பிறப்பிடம் (Home of Cricket) என அறியப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 1884ஆம் ஆண்டு முதல்முறையாக ஆண்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
கிட்டத்தட்ட 142 ஆண்டு இடைவெளிக்கு பிறகுதான் புகழ்பெற்ற டெஸ்ட் மைதானத்தில் மகளிர் கிரிக்கெட்டுக்கான டெஸ்ட் போட்டியை நடத்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை மகளிர் கிரிக்கெட்டில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இந்த 142 ஆண்டுகால இடைவெளி, பெண்கள் விளையாட்டு ஆண்களுக்கு நிகரான சமமான மேடைகளை எட்ட எவ்வளவு காலம் காத்திருந்தது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தசூழலில் இந்தப்போட்டி வெறும் கிரிக்கெட்டாக மட்டுமில்லாமல் முன்னேற்றம், பிரதிநிதித்துவம் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பெண்களைப் பெரிய கனவுகளைக் காணத் தூண்டுவதைப் பற்றிய தருணமாக மாறியது.
இப்படியான மகத்தான வரலாற்று போட்டியில் இங்கிலாந்தை டாமினேட் செய்து 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட்டில் வென்ற அணியாக சாதனை படைத்துள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் உலக வீராங்கனை என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் கிராந்தி கௌட். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும் லார்ட்ஸின் முதல் டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீராங்கனை என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார் கிராந்தி.
இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை யாஸ்திகா பாட்டியா லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த முதல் வீராங்கனையாக வரலாறு படைத்தார். 14 பவுண்டரிகளை விரட்டிய அவர் 113 ரன்கள் குவித்து அசத்தினார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அரைசதமடித்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், லார்ட்ஸ் மைதானத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவ போட்டிகளிலும் அரைசதமடித்த முதல் வீராங்கனையாக சாதனை படைத்தார்.