சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன்.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு.. ஆர்ச்சர் மோசமான சாதனை!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் விளையாடி இந்திய அணி இங்கிலாந்துக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில் சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அதில் 8 அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறின. அதில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட் செய்யப் பணித்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். வழக்கம்போலவே அபிஷேக் சர்மா ஏமாற்றினார். அவர், 9 ரன்களில் வெளியேறினார். ஆனால், கடந்த போட்டியில் அதிரடியில் கலக்கி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன், இந்தப் போட்டியிலும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவருடன் கைகோர்த்த இஷானும் கிஷனும் வேகம் காட்டினார். இருவரும் இணைந்து இந்தியாவின் ரன்ரேட்டை உயர்த்தினர்.
ஒருகட்டத்தில், இஷான் கிஷன் பந்தை சிக்ஸருக்குத் தூக்க அது வில் ஜேக்ஸ் கையில் கேட்சாக மாறியது. அவர் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின் களமிறங்கிய ஷிவம் துபேவும் அதிரடியில் ஈடுபட்டார். இதற்கிடையே சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸருடன் 89 ரன்கள் எடுத்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி இந்தியா 200 ரன்களைத் தாண்ட வைத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதில் ஷிவம் துபே 43 ரன்களும், ஹர்திக் 27 ரன்களும், திலக் 21 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக்ஸ் மற்றும் ரஷீத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதில், டி20 நாக் அவுட் போட்டிகளில் 50+ ரன்களைக் கொடுத்த பவுலர் எனும் மோசமான சாதனையை ஆர்ச்சர் படைத்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களுக்கு அவர் 61 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

