“என்றைக்கும் No.1-தான்” அமிதாப், ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளிய தோனி.. எதில் தெரியுமா?
இந்திய அணியின் கூல் கேப்டன் என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலும் தோனி தான். இப்போது மட்டுமல்ல எப்போதும் சூப்பர் ஸ்டார். நல்ல ஃபார்மில் இருக்கும் வரை லைம் லைட்டிலேயே இருக்கும் பல வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆனதும் ரசிகர்களின் மனதில் இருந்தே மறைந்துவிடுவார்கள். ஆனால், வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஐபிஎல் தொடரில், 14 முதல் 18 போட்டிகளில் மட்டுமே களத்திற்கு வரும் தோனி எப்போதும் வைரல் மனிதர்தான். வாகனம் ஓட்டினால், நடனம் ஆடினால், ரசிகர்கள் நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் கூட செய்தி ஆகிவிடும்.
43 வயதான நபர், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும் அவரது செயல்பாடுகள் தலைப்புச் செய்தியாவது தோனிக்கு இப்போதும் சாத்தியம். இத்தனைக்கும் காரணம் அவரது ரசிகர்கள். தோனி களத்திற்கு வந்தால் மட்டும்போதும், கொண்டாடித்தீர்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.
போதா குறையாக.. விளம்பரத்திற்காக தோனியை முட்டி மோதுகின்றன நிறுவனங்கள். 2024 ஆம் ஆண்டின் முதல்பாதியில் மட்டும் தோனி 42 பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக TAM மீடியா ரிசர்ச், இங்கிலாந்தின் காந்தார் மற்றும் அமெரிக்காவின் நீல்சன் போன்ற நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கானை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமிதாப் 41 ஒப்பந்தங்களையும், ஷாருக்கான் 34 ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 24 நிறுவனங்களின் விளம்பரங்களுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
நியூஸ் 18 உடனான உரையாடலில் பிராண்ட் உத்தி நிபுணர் ஒருவர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தோனி கிரிக்கெட் அல்லது விளையாட்டு வீரர் என்ற ஒன்றிற்கு அப்பாற்பட்டவராகக் கருதப்படுபவர்” எனத் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை அன்கேப்ட் வீரராக 4 கோடிக்குத் தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.