ஆந்திரா | 3 ஆண்டுகளாக பின் தொடர்ந்த இளைஞர்; 16 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!
ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ஆண்டுகளாக தன்னை பின் தொடர்ந்து தொல்லை தந்த இளைஞரின் காதலை 16 வயது சிறுமி ஏற்க மறுத்ததால், அச்சிறுமியை இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 21 வயதான ராகவேந்திரா என்னும் இளைஞர் பின் தொடர்ந்து, சிறுமி போகும் போதும் வரும்போதும் பெரும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுமி பல முறை இளைஞரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், கடந்த திங்கள்கிழமை அன்று சிறுமி தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது. அப்போதுதான் பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமயம் பார்த்து, சிறுமியின் அறையில் நுழைந்த இளைஞர் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது சிறுமியின் வாயை கட்டியதால் உதவிக்காக கூட அவரால் யாரையும் அழைக்கமுடியாததால், பரிதாபமாக சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்ததுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், “ சிறுமி நந்திகோட்குருவில் உள்ள தனது பாட்டியுடன் தங்கியிருந்துள்ளார். சம்பவ தினத்தன்று அதிகாலை 4 மணி அளவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ராகவேந்திரா பலத்த தீக்காயங்களுடன் அறையைவிட்டு வெளியே வந்துள்ளார். அதற்குள் சிறுமி முற்றிலுமாக தீக்கிரையாகினார்.” என்று தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற ராகவேந்திராவை உள்ளூர் மக்களிடம் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.. தற்போது 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ராகவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு ஆந்திரப்பிரதேச உள்துறை அமைச்சர் அனிதா, தனது கடும் கண்டனத்தை பதிவுசெய்ததோடு, இது குறித்து விசாரணை செய்யும்படி குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.