
போட்டி 19: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
முடிவு: 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஆஸ்திரேலியா - 367/9; பாகிஸ்தான் - 305 ஆல் அவுட், 45.3 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
பேட்டிங்: 124 பந்துகளில் 163 ரன்கள் (14 ஃபோர்கள், 9 சிக்ஸர்கள்)
ஆட்டத்தை மாற்றியவர், ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்ற அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் ஆடம் ஜாம்பாவுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கியிருக்கவேண்டும். யோசித்துப் பாருங்கள்... பெங்களூரு மைதானத்தில் பெரிய ஸ்கோர்கள் அடிப்பது அசாத்தியமான விஷயம் இல்லை. சிக்ஸர்கள் பறப்பது இங்கு சாதாரணம்.
வார்னர் மட்டுமல்ல, மார்ஷும் சதம் அடித்தார். ஆஸ்திரேலியா 367 விளாசியது என்றால், பாகிஸ்தானும் பதிலுக்கு 305 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த ரன்ரேட் 7.04. இப்படியொரு போட்டியில் 163 ரன்களே குவித்திருந்தாலும், வார்னரின் செயல்பாட்டை ஜாம்பாவின் செயல்பாட்டோடு ஒப்பிட்டால், அந்த லெக் ஸ்பின்னரின் தாக்கமே பெரிதானதாக இருக்கிறது.
7.04 என்ற ரன்ரேட்டில் முடிந்த இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசி 53 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்துவது சாதாரண விஷயமில்லை. அதுவும் பாகிஸ்தான் ஆரம்பித்த விதத்துக்கு, நிச்சயம் இந்த சேஸை அவர்கள் முடித்துவிடுவார்களோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஜாம்பாவின் ஸ்பெல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேப்டன் பாபர் ஆசம், துணைக் கேப்டன் முகமது ரிஸ்வான், 3 சிக்ஸர்கள் பறக்கவிட்ட இஃப்திகர் அஹமது, முகமது நவாஸ் என பாகிஸ்தானின் மிடில் ஆர்டரை அப்படியே உடைத்தார் ஜாம்பா. அதனால்தான் சிறப்பாகத் தொடங்கிய பாகிஸ்தானின் இன்னிங்ஸ் தடம் புரண்டது. என்ன செய்வது, வழக்கம்போல் ஒரு பேட்ஸ்மேனின் கையிலேயே தஞ்சமடைந்திருக்கிறது இவ்விருது.
அதற்காக வார்னரின் இன்னிங்ஸை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றில்லை. அது ஒரு அட்டகாசமான இன்னிங்ஸ் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தடுமாறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை எழுச்சிப் பெறவைக்க இப்படியொரு இன்னிங்ஸ் தேவைப்பட்டது.
ஐந்தாவது ஓவர் வரை வார்னர் சற்று அடக்கியே வாசித்தார். ஹசன் அலி வீசிய நான்காவது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர் அடித்திருந்தார். ஆறாவது ஓவருக்குப் பிறகு தான் அவரது விஸ்வரூபம் தொடங்கியது. ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது அடித்துவிடவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஆடினார் அவர். புதிதாக வந்த பௌலர்களையெல்லாம் அவர் செட்டில் ஆகவே விடவில்லை. ஆரம்பத்திலேயே டார்கெட் செய்து அவர்களை நிலைகுலையவைத்தார்.
இஃப்திகர் அஹமது வார்னருக்கு வீசிய இரண்டாவது பந்திலேயே ஃபோர். ஹசன் அலி அவருக்கு வீசிய முதல் பந்திலேயே ஃபோர். உசாமா மிர் வந்தால் மூன்றாவது பந்தில் ஃபோர், இப்படி பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார். வார்னரின் அதிரடிக்கு முன்னால் மறுபக்கம் மிட்செல் மார்ஷ் மெதுவாக ஆடுவது போல இருந்தது. அந்த அளவுக்கு பாகிஸ்தான் பௌலர்களை புரட்டி எடுத்தார்.
39 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 85 பந்துகளில் சதம் கடந்தார். உலகக் கோப்பை அரங்கில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இது. அதன்பிறகும் வேகம் குறையாமல் விளாசிய அவர், 122 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். எப்படியும் 200 அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அவர்.
அவர் ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 42.2 ஓவர்களில் 325 ரன்கள். அடுத்த 46 பந்துகளில் அந்த அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. இப்படி நிலைத்தன்மை இல்லாமல் ஆடும் ஆஸ்திரேலிய அணி, வார்னர் சீக்கிரமே அவுட் ஆகியிருந்தால் இந்த ஸ்கோர் கூட வந்திருக்காது என்று கருதி, இதுதான் மிகமுக்கிய பெர்ஃபாமன்ஸ் என்று அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கலாம்!
ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?
"மிட்செல் மார்ஷுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியது அட்டகாசமாக இருந்தது. ஆடுகளம் ஓரளவு வேகமாக இருந்ததால், நாங்கள் பௌலர்களை டார்கெட் செய்து ஆடினோம். இப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நன்றாக பேட்டிங் செய்வதாகவே உணர்ந்தேன்.
அதிர்ஷடம் சற்று இல்லை என்று நினைத்திருந்தேன். அது அமைந்துவிட்டது. இப்படியொரு மைதானத்தில் ஆடும்போது நீங்கள் சில ரிஸ்க் எடுக்கவேண்டும். 35 ஓவர்கள் வரை நாங்கள் இருவரும் ஆடினால் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கலாம் என்று பேசியிருந்தோம்" - டேவிட் வார்னர்