AUS Vs PAK: ஒரே போட்டியில் ஆஸி. படைத்த பல சாதனைகள்... ருத்ரதாண்டவம் ஆடிய டேவிட் வார்னர்!

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆஸ்திரேலியா அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ்
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ்ட்விட்டர்
Published on

பெங்களூருவில் மோதிய ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் போட்டிபோட்டபடி, புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு முயன்று வருகின்றன. இந்தப் பட்டியலில், இந்திய அணி, தாம் சந்தித்த 4 போட்டிகளிலும் (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம்) வெற்றிபெற்று வீறுநடை போட்டு வருவதுடன், புள்ளிப் பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. 3 மற்றும் 4வது இடங்களில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இந்தத் தொடரில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆஸ்தி. - பாக்.
ஆஸ்தி. - பாக்.

வார்னர் மற்றும் மார்ஷ் சதம்: 367 ரன்கள் குவிப்பு!

இதில் இன்று 18வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தது. அதன்படி, அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க பேட்டர்களான டேவிட் வார்னரும் (163), மிட்செல் மார்ஷும் (121) சதம் அடித்து அசத்தியிருந்தனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 5,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

ஆஸ்திரேலிய அணி நிகழ்த்திய சாதனைகள்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரால் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த சாதனைகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

வார்னர்
வார்னர்

ஓர் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 4 சதங்கள்

இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரி, 9 சிக்சருடன் 163 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக சமீபத்திய போட்டிகளில் மட்டும் 4 சதம் அடித்துள்ளார். இதில் 2017ஆம் ஆண்டு மட்டும் 179 (128), 130 (119) ஆகிய ரன்களில் 2 சதங்களைப் பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு 107 (111) ரன்கள் எடுத்துள்ளார். இத்துடன் இன்று அடிக்கப்பட்ட சதமும் இணைந்துள்ளதால், ஓர் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக மற்றும் தொடர்ச்சியான சதம் அடித்த வீரராகியுள்ளார் வார்னர். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலியும் உள்ளார். அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு அணிக்கு எதிராக 2017-18 ஆண்டுகளில் 4 சதம் கண்டுள்ளார்.

வார்னர்
வார்னர்

உலகக்கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடம்

உலகக்கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் வார்னர் இணைந்துள்ளார். அதில் அவர், தலா 2 வீரர்களுடன் 3வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் 7 சதங்களுடன் இந்திய கேட்பன் ரோகித் முதல் இடத்திலும், மற்றொரு இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்களுடன் 2வது இடத்திலும், 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், குமார சங்ககரா, டேவிட் வார்னர் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் மூவரும் தலா 5 சதங்கள் அடித்துள்ளனர்.

இதையும் படிக்க: கடைக்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள்.. அதிர்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - நடந்தது என்ன?

ஒருநாள் போட்டியில் பிறந்த நாளின்போது சதம் அடித்த வீரர்கள்

இன்றைய போட்டியில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷும் சதம் கண்டிருந்தார். அவர் 108 பந்துகளில் 10 பவுண்டரி, 9 சிக்சருடன் 121 ரன்கள் எடுத்தார். அத்துடன், அவருக்கு இன்று பிறந்த நாள் வேறு. இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பிறந்த நாளின்போது சதம் கண்ட வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்

இந்தப் பட்டியலில்

- 2022 தன் 30வது வயதில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (140*),

- 1998 தன் 25வது வயதில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (134),

- 2011 தன் 27வது வயதில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் (131),

- 2008 தன் 39வது வயதில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா (130),

- 1993 தன் 21வது வயதில் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி (100*),

- இன்றைய போட்டியில் 32வது வயதில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் (121),

சதம் அடித்து அசத்தி உள்ளனர். இதில் முதன்முதலில் பிறந்தநாளின்போது சதம் அடித்தவர் வினோத் காம்ப்ளி (1993). அவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் (1998) அடித்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் உலகக்கோப்பையில் பிறந்த நாளின்போது சதம் அடித்த வீரர்கள் ரோஸ் டெய்லர் (2011), மிட்செல் மார்ஷ் (2023) மட்டுமே.

உலக்கோப்பையில் இரண்டு தொடக்க வீரர்களும் சதம் கண்ட பட்டியல்

உலகக்கோப்பை தொடரில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் சதம் கண்ட வீரர்களின் பட்டியலிலும் வார்னரும், மார்ஷும் இடம்பிடித்துள்ளனர். இதற்கு முன்பு இந்தப் பட்டியலில் இலங்கையின் உபுல் தாரங்கே - திலகரதே தில்ஷன் இணை இரண்டு முறை சாதனை படைத்துள்ளது. அந்த ஜோடி கடந்த 2011 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் சதம் கண்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்திய வீரர்களான ரோகித் ஷர்மா - கே.எல்.ராகுல் இணை, 2019இல் சதம் கண்டுள்ளனர். இந்த வரிசையில்தான் வார்னரும், மார்ஷும் இன்று இணைந்துள்ளனர்.

வார்னர்
வார்னர்

உலகக்கோப்பை: பார்டனர்ஷிப்பிலும் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இடம்

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவித்த ஜோடியிலும் (எந்த விக்கெட்டிலும்) வார்னர் - மார்ஷ் ஜோடி இணைந்துள்ளது. அதில்

- மேற்கிந்திய இணை கிறிஸ் கெய்ல் - சாமுவேல்ஸ் (372) முதல் இடத்திலும்,

- இந்திய இணை கங்குலி - டிராவி (318) 2வது இடத்திலும்,

- இலங்கை இணை தில்ஷன் - தாரங்கே (282) 3வது இடத்திலும்,

- நியூசிலாந்து இணை கான்வே - ரவீந்திரா (273*) 4வது இடத்திலும்,

- ஆஸ்திரேலிய இணை வார்னர் - ஸ்மித் (260) 5வது இடத்திலும்,

- அதே ஆஸ்திரேலிய இணை மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் (259) 6வது இடத்திலும்

உள்ளனர்.

இதையும் படிக்க: பக்தர்களால் ‘அம்மா’ என்றழைக்கப்படும் பங்காரு அடிகளார்.. யார் இவர்.. ஆன்மிகத்தில் செய்தது என்ன?

ஆஸ்திரேலிய அணியில் மட்டும் அதிக ரன்களைக் குவித்த பார்ட்னர்ஷிப்பிலும் இடம்

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மட்டும் அதிக ரன்களைக் குவித்த பார்ட்னர்ஷிப் என்ற பட்டியலிலும் இந்த இணை (வார்னர் - மார்ஷ்) சாதனை படைத்துள்ளது.

- இதே டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து 2017இல் 284 ரன்களுடன் முதல் இடத்திலும்,

- தொடர்ந்து 2022இல் அதே டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த வார்னர் 269 ரன்களுடன் 2வது இடத்திலும்,

- அதே வார்னர் இன்று மார்ஷுடன் இணைந்து 259 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இதே டேவிட் வார்னர் ஆரோன் பின்ச்-உடன் இணைந்து 2020இல் 258 ரன்களை எடுத்துள்ளனர்.

மார்ஷ்
மார்ஷ்

ஒருநாள் போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை குவித்த ஆஸ்தி. வீரர்

ஒருநாள் போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை அடித்த வீரர்கள் பட்டியலிலும் வார்னர் இடம்பிடித்துள்ளார். இதில் ரோகித் சர்மா 8 முறை 150க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் டேவிட் வார்னர் உள்ளார். அவர் 7 முறை எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் கெய்ல், விராட் கோலி ஆகியோர் தலா 3 முறை எடுத்து 3வது இடத்தில் உள்ளனர்.

உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் குவிப்பு சாதனையிலும் டேவிட் வார்னரே மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவர் ஏற்கெனவே 2015இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 178 ரன்களும், அதைத் தொடர்ந்து 2019இல் வங்கதேசத்துக்கு எதிராக 166 ரன்களும், அதைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் 163 ரன்களும் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க: “நம்பிக்கை இழக்கவில்லை” - இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என மீண்டும் பதிவிட்ட பாகிஸ்தான் நடிகை!

உலகக்கோப்பை: அதிகபட்ச சிக்சரிலும் இடம்பிடித்த டேவிட் வார்னர்

உலகக்கோப்பையில் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையிலும் டேவிட் வார்னர் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் தலா 9 சிக்சருடன் டேவிட் வார்னர் டேவிட் மில்லருடன் 4வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்களுக்கு முந்தைய இடங்களில் மோர்கன் (17) முதல் இடத்திலும், கிறிஸ் கெய்ல் (16) 2வது இடத்திலும், மார்ட்டின் குப்தில் (11) 3வது இடத்திலும் உள்ளனர்.

வார்னர்
வார்னர்

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஓர் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 19 சிக்சர்களை அடித்துள்ளது. இதை, பாகிஸ்தான் (2023) மற்றும் இந்தியாவுக்கு (2019) எதிராக அவ்வணி எடுத்துள்ளது. அதுபோல் உலகக்கோப்பையில் அடித்த பட்டியலிலும் இணைந்துள்ளது. தலா 19 சிக்சருடன் வெஸ்ட் இண்டீஸுடன் ஆஸ்திரேலிய அணி, 2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்து 25 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: IND Vs NZ: ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் யார்.. ரேஸில் மூவர்? ரோகித் கையில் இறுதி முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com