பேபி ஆர்மியாக மாறிய டாடி ஆர்மி., 16 ஆண்டுகால உத்தியை மாற்றிய சூப்பர் கிங்ஸ்.!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தேர்வில் 16 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இரும்புக்கரம் போன்ற நடைமுறைகளை உடைத்திருக்கிறது. ஏலத்தில் கடைசி வரை காத்திருந்து சில இளம் வீரர்களை கொக்கி போட்டு கொத்தாக தட்டித்தூக்கியிருக்கிறது சென்னை அணி. இதுவரை ஒவ்வொரு ஏலத்தின்போதும் திரைக்குப் பின்னால் இருந்து காய் நகர்த்தும் எம்.எஸ்.தோனி, இந்த முறை அமைதி காத்ததுதான் கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்.
கடந்த சீசனில் சந்தித்த தொடர் தோல்விகள், அணியின் மெதுவான ஆட்டம் என எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகிவிட்டது நிர்வாகம். செப்டம்பர் மாதம் நடந்த தேர்வு முகாமிலேயே இளம் வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, நிர்வாகமே முடிவெடுக்கட்டும் என தோனி பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஏலத்தின்போது ஸ்டீபன் பிளெமிங்கோ அல்லது நிர்வாகமோ தோனியிடம் ஒரு போன் கால் கூட செய்யவில்லையாம். அனுபவமே வெற்றி தரும் என்ற பழைய பாணியை ஓரம் கட்டிவிட்டு, 21 வயதான பிரஷாந்த் வீர் மற்றும் 19 வயதான கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா 14 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாரி அணைத்துள்ளது சென்னை. அனுபவமில்லாத வீரர்களுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சாதனைத் தொகை இது.
டி20 கிரிக்கெட்டில் அனுபவசாலிகள் சில நேரம் ஆட்டத்தின் ஓட்டத்தில் சிக்கிக் கொள்வார்கள், ஆனால் இந்த இளம் வீரர்கள் எதற்கும் பயப்படுவதில்லை எனச் சிலாகித்துக் கூறுகிறார் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன். 2018-ல் 'நாங்கள் கோப்பை வெல்லவே வந்திருக்கிறோம், இளம் வீரர்களை உருவாக்க அல்ல' என்று கர்ஜித்த பிளெமிங், இன்று கால மாற்றத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். டாடி ஆர்மியில் இருந்து பேபி ஆர்மியாக உருவெடுத்துள்ள இந்த மஞ்சள் படை, ஐபிஎல் எனும் பிரம்மாண்ட மேடையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. இளம் படை நடப்பு சீசனில் விசில் போடுமா ? அல்லது அனுபவ பலம் படைத்த பிற அணிகள் முன் விழி பிதுங்கி அனுபவம் பெறுமா என்பதை நடப்பு சீசனில் காணலாம்..

