Stubbs விக்கெட் திட்டமிட்ட சதியா.? Helmet-ஐ தூக்கி எறிந்து காட்டம்.. நடுவரிடம் நிதிஷ் வாக்குவாதம்.!
செய்தியாளர்: விக்னேஷ்
2026 IPL தொடரில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்து தவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டெல்லி கேப்பிடல்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங் தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 212 ரன்களை குவித்தது. அதில் சஞ்சு சாம்சனின் 115 ரன்களும் ஆயுஷ் மாத்ரேவின் 59 ரன்களும் சென்னை அணிக்கு முக்கிய பங்காற்றியது.
பின் இந்த இமாலய இலக்கை நோக்கி களத்தில் இறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் பத்தும் மற்றும் கே.எல்.ராகுலின் ஆட்டம் சென்னை அணிக்கு சவாலாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து டெல்லி அணி சற்று தடுமாறியது. பின் பேட்டிங்க்கு வந்த மில்லர், அஷோடோஷ் சர்மா, ஸ்டப்ஸ் ஆகிய வீரர்கள் நிதானமாக ஆடி ரன்களை குவிக்க தொடங்கினர். இது சென்னை அணியின் வெற்றிக்கு சற்று சவாலாக மாறியது. அதிலும் முக்கியமாக, ஸ்டப்ஸின் 60 ரன்கள் சென்னைக்கு சிக்கலாக மாறியது.
டெல்லி வீரர் ஸ்டப்ஸ் களத்தில் ஆடிக்கொண்டிருக்கும் போது, திடீரென நிதிஷ் ராணா பௌன்ரி நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கவனிக்கப்பட்டது. பின் அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது, களத்தில் இருந்த ஸ்டப்ஸின் கை க்ளோவ் அதிகப்படியான ஈரப்பதமானதால் அதனை மாற்ற கோரியுள்ளார். ஆனால் நடுவர்கள் அதனை மாற்ற மறுத்த காரணத்தால் நிதிஷ் ராணா நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கிளவுஸ் வியர்வையினால் ஈரமாக இருப்பதால் விளையாடுவது கடினம் மற்றும் பாதுகாப்பற்றது என்று ராணா நடுவரிடம் வாதிட்டதாக தகவல் கூறுகிறது. மேலும், சென்னை அணிக்கு இது போன்ற மாற்றங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகவும், தங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
டி20 கிரிக்கெட் விதிமுறைப்படி, ஒரு ஓவர் முடியும் வரை அல்லது குறிப்பிட்ட இடைவேளைகளின் போது மட்டுமே பேட்டர்கள் உபகரணங்களை மாற்ற முடியும். ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது கிளவுஸ் மாற்றுவது ஆட்டத்தின் வேகத்தை குறைக்கும் என்பதால் நடுவர்கள் தடுத்தாக சொல்லப்படுகிறது.
IPL 2026-ன் புதிய விதிகளின்படி, அணியின் அதிகாரப்பூர்வ பட்டியலில் உள்ள 16 வீரர்கள் மட்டுமே மைதானத்திற்குள் செல்ல முடியும். ஸ்டப்ஸுக்கு கிளவுஸ் கொண்டு வந்த கருண் நாயர் அந்தப் பட்டியலில் இல்லாததால் அவர் மைதானத்திற்குள் நுழைய நடுவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் நடந்த அடுத்த பந்திலேயே ஸ்டப்ஸ் தனது விக்கெட்டை இழந்தது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. தொடர்ந்து ட்ரெஸ்ஸிங் அறைக்குள் கடும் கோபத்தில் வந்த ஸ்டப்ஸ் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது அவரின் விரக்தியின் உச்சத்தை காட்டியது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

