தரமான கம்பேக்.. 52 பந்தில் சதமடித்தார் சஞ்சு சாம்சன்! 212 ரன்கள் குவித்த CSK!
2026 ஐபிஎல் தொடரில் தொடர் 3 தோல்விகளால் விமர்சனத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான 4வது லீக் போட்டியில் அதிரடி கம்பேக் செய்தது. ஏலத் தேர்வுகள், டெத் பவுலிங், ஃபினிஷர் பேக்கப் குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மத்தியில், சஞ்சு சாம்சன் 56 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்து, அணிக்கு 20 ஓவரில் 212 ரன்கள் என வலுவான ஸ்கோரை அமைத்தார்.
2026 ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளில் 9 அணியும் புள்ளிகளை பெற்றுவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இன்னும் ஒரு புள்ளியை கூட பெறவில்லை. இதற்கு சென்னை அணி ஏலத்திலேயே வீரர்களை தேர்வுசெய்ததில் கோட்டைவிட்டுவிட்டது எனவும், டெத் பவுலர், ஃபினிசர்களுக்கு பேக்கப் வீரர்களே இல்லை எனவும் பல்வேறு குறைகள் சொல்லப்படுகின்றன.
ஆனால் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரேவிஸ், மகேந்திர சிங் தோனி போன்றவர்கள் அணிக்குள் வந்துவிட்டால் இருக்கும் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்றும் மறுபக்கம் சொல்லப்பட்டது.
இந்தசூழலில் தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
52 பந்தில் சதமடித்த சஞ்சு சாம்சன்..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி சிஎஸ்கேவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக தொடங்கினர். ஒருபக்கம் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டினாலும், மறுபக்கம் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்திய கெய்க்வாட் மீண்டும் 15 ரன்னில் வெளியேறி சொதப்பினார்.
ஆனால் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் 56 பந்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட ஆயுஷ் மாத்ரே 59 ரன்கள் அடித்து ரிட்டயர்டு அவுட் மூலம் வெளியேறினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 56 பந்தில் 15 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 212 ரன்களை சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2026 ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவுசெய்தார் சஞ்சு சாம்சன்.

