டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி இல்லையா..? கடுப்பான ஸ்டீபன் ஃபிளெமிங்! விமர்சனங்களுக்கு பதில்!
சிஎஸ்கே அணியின் சமீபத்திய தோல்விகளுக்குப் பிறகு, ஸ்டீபன் ஃபிளெமிங் மீது முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, பத்ரிநாத், பாலாஜி உள்ளிட்டோர் கடும் விமர்சனங்கள் எழுப்பினர். நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்த அப்டேட் இல்லை, ஐபிஎல்லைத் தவிர வெற்றி இல்லை என குற்றம்சாட்டிய நிலையில், ஆண்டு முழுவதும் பல லீக்களில் பயிற்சி அளித்து வருவதாகவும், ஆட்டத்தின் மாற்றங்களை நன்கு புரிந்திருக்கிறேன் எனவும் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
தோனி தலைமையில் 5 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றிருந்தாலும், 2023-க்கு பிறகு கேப்டன்சியிலிருந்து தோனி விலகிய பிறகு சிஎஸ்கே படுமோசமாக செயல்பட்டு வருகிறது.
இந்தசூழலில் தான் தோனியால் தான் சிஎஸ்கே 5 முறை கோப்பை வென்றது என்றும், ஸ்டீபன் ஃபிளெமிங் கோச்சாக இருந்தாலும் அவர் நல்ல கோச் கிடையாது என்றும், ஐபிஎல்லை தவிர அவரால் வேறு எங்கேயும் கோப்பை வெல்லமுடியவில்லை என்றும் முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி விமர்சித்திருந்தார்.
அதேபோல முன்னாள் சிஎஸ்கே வீரர்களான பத்ரிநாத் மற்றும் லட்சுமிபதி பாலாஜி இருவருமே ஸ்டீபன் ஃபிளெமிங் அப்டேட் ஆகவில்லை என்றும், நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தார்போல மாறவேண்டும் என்றும் விமர்சித்திருந்தனர்.
இந்தசூழலில் தான் தன்மீதான விமர்சனங்களுக்கு ஃபிளெமிங் பதிலளித்துள்ளார்.
அப்டேட் இல்லாமல் ஐபிஎல்லில் இருக்க முடியாது..
இன்றைய டெல்லி போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீபன் ஃபிளெமிங், தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “நீங்கள் சிறப்பாகச் செயல்படாதபோது விமர்சனம் வருவது நியாயமானது தான். அது இந்தப் பதவியின் ஒரு பகுதி. பாருங்கள், நான் ஆண்டு முழுவதும் பயிற்சியில் இருக்கிறேன் மற்றும் வேறு இரண்டு லீக்களிலும் பயிற்சியளிக்கிறேன், மேலும் பல வீரர்களுக்கான ஏலங்களையும் நடத்துகிறேன். எனவே, ஆட்டம் எந்தத் திசையில் செல்கிறது என்பது பற்றிய எந்த யோசனையும் இல்லாமல், திடீரென்று ஐபிஎல்-க்கு வருகிறேன் என்பதல்ல. எனக்கு அது நன்றாகவே தெரியும், நாம் இன்னும் கடினமாக உழைத்து முன்னேறுவதற்கான ஒரு வழியைக் கண்டறிய வேண்டும். ஆனால், நான் ஆட்டத்துடன் தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்று பதிலளித்தார்.
மேலும் தோனி குறித்து பேசிய அவர், “எல்லாக் காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவருடன் நான் பணியாற்றியுள்ளேன், அதிலும் ஒரு பயிற்சியாளராக அவருடன் தொடர நம்பமுடியாத அளவிற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். எனவே, அது என் மனதில் இருந்து நீங்கவில்லை, எங்களுக்கு கிடைத்த முடிவுகளுக்காக நான் பெருமைப்படுகிறேன், ஆனால் அதற்கான பாராட்டுகளை நான் பெற ஏங்கவோ அல்லது விரும்பவோ இல்லை” என்று பேசினார்.

