தோனியே வேண்டாம் என மறுத்த STRATEGY.. மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் CSK! விளாசும் முன்.வீரர்கள்!
2026 ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை புறக்கணித்த சிஎஸ்கே, டெத் பவுலிங் பலவீனத்தால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆர்சிபி எதிராக கடைசி 5 ஓவரில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்து, 250 ரன்கள் ஒப்புக்கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. தோனி இதற்குமுன்பு நிராகரித்த ‘அரவுண்ட் தி ஸ்டம்ப் வைடு யார்க்கர்’ திட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாக ராயுடு, அஸ்வின், டூபிளெஸி,ஃபிஞ்ச் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
2026 ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சென்னை அணி செல்லாதபோதே அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்தன. பேட்ஸ்மேன்கள் நன்றாக இருந்தாலும் பந்துவீச்சு சுமாராக இருப்பதாகவும், அதிலும் டெத் பவுலிங் ஸ்பெசலிஸ்ட் பவுலர்களே இல்லாதது பெரிய பாதகமாக அமையும் என சொல்லப்பட்டது. போதாக்குறைக்கு ஒரே ஒரு டெத் ஸ்பெசலிஸ்ட் பவுலராக இருந்த நாதன் எல்லிஸும் காயம் காரணமாக விலகிய நிலையில், டெத்தில் வீசக்கூடிய பவுலரே இல்லாமல் தத்தளித்து வருகிறது சிஎஸ்கே.
இந்தசூழலில் தான் 10 ஆண்டுக்கு முன்பு எப்படி ஆர்சிபி அணியில் நட்சத்திர பேட்டர்கள் இருந்தும் பவுலர்கள் இல்லாமல் படுதோல்வியை சந்தித்தார்களோ அதேபோல தற்போதைய சிஎஸ்கே அணி விளையாடிவருவதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
இதற்கும் ஒருபடிமேல் தற்போதைய சிஎஸ்கே அணியில் டெத் பவுலிங்கில் தோனி நிராகரித்த STRATEGY பயன்படுத்தப்படுவதாக முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
தோனி நிராகரித்த STRATEGY..
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவர்களுக்கு 97 ரன்களை விட்டுக்கொடுத்த சிஎஸ்கே பவுலர்கள், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சென்னை அணியை 250 ரன்களை விட்டுக்கொடுக்க வழிவகைசெய்தனர். அதிலும் டெத் ஓவரில் சென்னை அணி பவுலர்கள் பயன்படுத்திய 'அரவுண்ட் தி ஸ்டம்ப் வைடு யார்க்கர்' திட்டம் பெரும்பாலான முன்னாள் சிஎஸ்கே வீரர்களால் விமர்சிக்கப்பட்டது. அது மார்டன் டே டி20 கிரிக்கெட்டில் செயலிழந்துபோன திட்டம் என்றும், இதை தோனியே பயன்படுத்த வேண்டாம் என நிராகரித்ததாகவும் தெரிவித்தனர்.
கிறிக்இன்ஃபோ உடன் நடந்த உரையாடலில், சென்னை அணி பவுலர்கள் 'அரவுண்ட் தி ஸ்டம்ப் வைடு யார்க்கர்' பந்துகளை தொடர்ந்து வீசியதாகவும், அதை பேட்ஸ்மேன்கள் கணித்த பிறகும் வேறு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. சிஎஸ்கேவில் மட்டுமில்லாமல் தென்னாப்பிரிக்கா டி20 லீக், அமெரிக்கா டி20 லீக்கில் இருக்கும் மற்ற சென்னை அணிகளான ஜோபர்க் சூப்பர் சிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளிலும் இதே திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், ஆனால் அங்கேயும் அத்திட்டம் பலனளிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
அந்த உரையாடலில் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு, இந்த திட்டம் தாங்கள் விளையாடியபோதும் வலைப்பயிற்சியில் பயன்படுத்தியதாகவும், ஆனால் இதை போட்டிகளில் பயன்படுத்த தோனி மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பந்துகளை பேட்ஸ்மேன்கள் அரை அடி கிரீஸிலிருந்து முன்னாள் நின்றால் கூட எளிதாக பவுண்டரிகளுக்கு விரட்டிவிட முடியும் என்றும் தெரிவித்தார். அந்த உரையாடலில் பேசிய முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், இந்த லெந்த் பந்துகளை டிம் டேவிட் போன்ற உயரமான வீரர்களால் எளிதில் தவிர்த்துவிட முடியும் என்று கூறினார்.
அதேபோல யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ஜோபர்க் சூப்பர் சிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என அனைத்து சிஎஸ்கே ஜெர்ஸியிலும் பவுலர்கள் 'அரவுண்ட் தி ஸ்டம்ப் வைடு யார்க்கர்' வீசுகிறார்கள். யார் பேட்ஸ்மேன் என்றெல்லாம் இல்லை, அனைவருக்கும் அதே பந்துகள் தான். முந்தைய ஓவரில் டிம் டேவிட்டுக்கு எதிராக ஹார்ட் லெந்த் பந்துகளை ஓவர்டன் வீசியபோது டிம் டேவிட்டால் தொடகூட முடியவில்லை. ஆனால் அவரை யார் 'அரவுண்ட் தி ஸ்டம்ப் வைடு யார்க்கர்' பந்தை வீச சொன்னது என்று புரியவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோல மற்றொரு முன்னாள் சிஎஸ்கே வீரரான ஃபேப் டூபிளெஸியும் இத்திட்டத்தை விமர்சித்திருந்தார்.
சென்னை அணியின் மூன்று அணிகளான CSK, JSK, TSK என அனைத்திலும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் என்பதால் சென்னை ரசிகர்கள் பயிற்சியாளரை மாற்றவேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.

