உடையும் தோனி கட்டமைத்த கோட்டை.. CSK அணியில் இருக்கும் 4 பெரிய ஓட்டைகள்! முடிவு தான் என்ன..?
2026 ஐபிஎல்லில் தொடர் தோல்விகளால் 10வது இடத்தில் தள்ளாடும் சிஎஸ்கே, அணியில் உள்ள நான்கு பெரிய ஓட்டைகளால் சிக்கலில் சிக்கியுள்ளது.
மிடில் ஆர்டரில் சிக்ஸ் ஹிட்டிங் மெஷின் டெவால்ட் பிரெவிஸ், ஸ்டம்புகளுக்கு பின்னால் மாஸ்டர் மைண்ட் தோனி இல்லாமல் 2026 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாகவே தொடங்கியுள்ளது. கடந்த ஐபிஎல்லில் எப்படி 10வது இடத்தில் முடித்தார்களோ, 2026-லும் அதே இடத்திலேயே தொடங்கியுள்ளது ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி.
நடப்பு சீசனில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் தோற்ற சென்னை அணி, நேற்று நடந்த 3வது போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக படுமோசமான தோல்வியை தழுவியது. இப்போட்டியில் 250 ரன்களை விட்டுக்கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பல குறைகள் அப்பட்டமாக வெளிப்பட்டன.
5 முறை கோப்பை வென்ற அணிக்கு இப்படி ஒரு நிலையா என்ற கேள்வி எழும் நிலையில், சென்னை அணி எங்கே சறுக்குகிறது, அணியில் இருக்கும் குறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்..
அணியில் இருக்கும் 4 ஓட்டைகள்..
ஆஃப் ஸ்பின்னர் இல்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 3 போட்டியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அனைவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், இரண்டாவது போட்டியில் பிரியான்ஸ் ஆர்யா, கூப்பர் கானலி, 3வது போட்டியில் தேவ்தத் படிக்கல் என அனைத்து இடது கை பேட்ஸ்மேன்களும் சென்னை அணிக்கு ஆபத்தானவர்களாக மாறினர். அவர்களுக்கு எதிராக பந்துவீசக்கூடிய ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட சென்னை அணியில் இல்லை.
இந்தப் பிரச்னையை சரிசெய்ய வேண்டுமானால் மேத்யூ ஷார்ட்டை நிரந்தரமாக பிளேயிங் 11-ல் சேர்க்கவேண்டும். பிக்பேஷ் லீக்கில் அவர் நல்ல எகானமியுடன் விக்கெட் வீழ்த்தும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை
கடந்த ஐபிஎல் சீசனில் தொடக்க வீரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே, இந்த சீசனில் நம்பர் 3 வீரராக களமிறக்கப்படுகிறார். தொடக்க வீரர்களாக களமிறங்கக்கூடிய சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். ஓப்பனிங் செய்யக்கூடிய சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இப்பிரச்னையை சரிசெய்ய தொடக்க வீரராக டி20 சதமடித்திருக்கும் மேத்யூ ஷார்ட் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரையும் ஒப்பனர்களாக களமிறக்கவேண்டும். சஞ்சு சாம்சன், ருதுராஜ் இருவரும் ஆர்டர் கீழிறக்கப்பட்டால் மிடில் ஆர்ட் குறைபாடும் நீக்கப்படும்.
டெத் பவுலிங் இல்லை
நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவரில் மட்டுமே கிட்டத்தட்ட 100 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் சிஎஸ்கே அணியின் பவுலர்கள். அணியில் டெத் பவுலிங் இல்லை என்பதையே இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நாதன் எல்லிஸ் என்ற ஒரு டெத் ஓவர் பவுலரை மட்டுமே வைத்துக்கொண்டு, அவருக்கு மாற்றுவீரரை ஏலத்தில் எடுக்காமல் போனது சென்னை அணிக்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது. டெத் பவுலிங் ஆப்சனிற்கு சென்னை அணியில் பெஞ்சில் கூட ஆள் இல்லை என்பது தான் மிகப்பெரிய சோகமான விஷயம்.
அணியில் இருக்கும் பெரிய பிரச்னையாக இருக்கும் இதை சரிசெய்ய ஸ்விங், ஸ்லோவர் பந்துகள், யார்க்கர் பந்துகள் என வேரியேசன்களை வைத்திருக்கும் குர்ஜப்னீத் சிங் அணியில் சேர்க்கவேண்டும். அன்ஷூல் கம்போஜ் டெத்தில் டீசண்டாக வீசுவதால், அவருக்கு யார்க்கர் பந்துகளுக்கான பயிற்சியை வழங்கி குரஜப்னீத், அன்ஷூல் கம்போஜ் இருவரையும் டெத் பவுலிங்கிற்காக ஒதுக்கலாம்.
இடது கை பேட்ஸ்மேன்கள் குறை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாதது பெரிய குறையாக மாறியுள்ளது. சொல்லப்போனால் 2026 ஐபில் அணிகளில் டாப் 3-ல் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே நீடிக்கிறது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த அணியிலும் ஷிவம் துபே மட்டுமே இருக்கிறார், பிரசாந்த் வீருக்கு எப்போது வாய்ப்பு வழங்குவார்கள் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.
இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்பது கிட்டத்தட்ட அணியில் இல்லை, ஷிவம் துபே மிடில் ஆர்டரில் வரவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. ஆனால் ஷிவம் துபே ஆடவரும்போது அவருக்கு எதிராக ஸ்பின்னர்களை தவிர்ப்பதை எதிரணி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதுபோன்ற சமயங்களில் அகீல் ஹொசைனுக்கு வாய்ப்பு வழங்குவதால் இந்த குறைகளை தவிர்க்கமுடியும்.
இருக்கும் குறைகளுக்கான தீர்வை விரைவில் சிஎஸ்கே கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்துவருகிறது.

