ஜடேஜாவை வெளியேற்றும் CSK..? சாம்சனை கொண்டுவர திட்டம்! வெளியான தகவல்!
அணியில் வீரர்களின் தேர்வு பெரிய குறைகளாக பார்க்கப்பட்ட நிலையில், தொடரின் முடிவில் டெவால்ட் பிரேவிஸ், ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற வீரர்களின் வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்திற்கு பலமாக மாறியது...
2023 ஐபிஎல் கோப்பை வென்ற கையோடு சிஎஸ்கே அணியின் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார் தோனி.. அதற்கு பிறகு 2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரில் 10வது இடத்தில் மோசமாக முடித்தது. போதாக்குறைக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பாதியிலேயே காயம் காரணமாக வெளியேறிய நிலையில், தோனியே தொடர் முழுவதும் கேப்டன்சி பொறுப்பை ஏற்றார்.
அணியில் வீரர்களின் தேர்வு பெரிய குறைகளாக பார்க்கப்பட்ட நிலையில், தொடரின் முடிவில் டெவால்ட் பிரேவிஸ், ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற வீரர்களின் வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்திற்கு பலமாக மாறியது..
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க நினைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகப்பெரிய வர்த்தகம் மூலம் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுவருவதாக செய்திவெளியாகி உள்ளது..
சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரப்போவதாக தொடர்ந்து பேச்சுக்கள் இருந்துவரும் நிலையில், மீண்டும் இந்த வர்த்தக பேச்சு சிஎஸ்கே அணியிடம் உயிர்பெற்றிருப்பதாக கிறிக்பஸ் கூறியுள்ளது.. மேலும் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்” என கிறிக்பஸ் உடன் தோனியின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேநேரத்தில் 2026 மினி ஏலத்திற்கு முன்பு அணி வீரர்களின் தக்கவைப்பு இறுதிநாளான நவம்பர் 15-ம் தேதிக்குள், எந்தவீரரை வெளியேற்ற வேண்டும் யார் தக்கவைக்கவேண்டும் என்ற ஆலோசனை கூட்டத்தை நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதி சிஎஸ்கே நடத்தவிருப்பதாக தெரிகிறது.. அதில் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்பார்கள்..
மேலும் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனை எடுத்துவரும் பேச்சு மீண்டும் உயிர்பெற்றிருப்பதாகவும், அவருக்காக சிஎஸ்கே அணி முக்கியமான வீரரை வெளியேற்றவிருப்பதாகவும், இது மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கும் எனவும் கிறிக்பஸ் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தன்னை வெளியேற்றுமாறு சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரை அணிக்குள் கொண்டுவர கொல்கத்தா, டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனுக்காக பெரிய டிரேடை திட்டமிட்டுள்ள நிலையில், சாம்சனுக்கு பதிலாக வெளியேற்றபோகும் வீரர் ஜடேஜாவாக இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

