2008-ல் CSK-க்கு எதிராக ஜெயசூர்யா செய்த சம்பவம்.. சாதனையை Repeat செய்த அபிஷேக் சர்மா!
முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அபிஷேக் சர்மா 24 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார், மேலும் பவர்பிளே 6 ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து SRH அணிக்கு 105 ரன்கள் சேர்த்தார். இதனால் 2008ல் CSKக்கு எதிராக மும்பைக்காக விளையாடிய சனத் ஜெயசூர்யா பதிய வைத்த சாதனையை அவர் ரிப்பீட் செய்தார்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டு விளையாடுகிறது. முல்லன்பூர் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பவுலிங்கை தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் அளவிற்கு ஒரு அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்தார்.
24 பந்தில் 8 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 74 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா, பவர்பிளேவில் மட்டும் 7 சிக்சர்களை பறக்கவிட்டு சாதனை படைத்தார். அபிஷேக் சர்மாவின் அதிரடியால் 6 ஓவரில் 105 ரன்களை குவித்து வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் அணி.
ஜெயசூர்யாவின் சாதனை சமன்..
பவர்பிளேவான முதல் 6 ஓவரில் மட்டும் 7 சிக்சர்களை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 ஓவரில் அதிக சிக்சர்கள் அடித்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையை சமன்செய்தார்.
2008 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பவர்பிளேவில் 7 சிக்சர்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் சனத் ஜெயசூர்யா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்தில் 11 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் குவித்திருந்தார். அன்று அவர் பவர்பிளேவில் அடித்த 7 சிக்சர்கள் சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
பவர்பிளேவில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:
சனத் ஜெயசூரியா (MI) vs CSK - 7 சிக்சர்கள் - 2008
ஜோஸ் பட்லர் (RR) vs DC - 7 சிக்சர்கள் - 2018
ஜானி பேர்ஸ்டோவ் (PBKS) vs RCB - 7 சிக்சர்கள் - 2022
அபிஷேக் சர்மா (SRH) vs PBKS - 7 சிக்சர்கள் - 2026

