ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (ETPL) | உரிமையாளரான கிரிஸ் கெய்ல்.. ஆகஸ்ட்டில் தொடக்கம்!
ஐசிசி அங்கீகாரம் பெற்ற ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (ETPL) ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை கிளாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், டப்ளின், பெல்பாஸ்ட், ரோட்டர்டாம் நகரங்களை மையமாகக் கொண்டு 6 அணிகள் பங்கேற்புடன் நடைபெறுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ முகாஃபியன்ஸ் அணிக்கு முகாஃபி குரூப், தன்ஷா பத்ரா உரிமையாளர்களாகவும், கிறிஸ் கெய்ல் இணை உரிமையாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் பல டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் லீக் தொடர்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்துவருகிறது. அந்தவகையில், ஐரோப்பாவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஐசிசியின் அங்கீகாரம் பெற்று ஐரோப்பிய டி20 (European T20 Premier League - ETPL) பிரீமியர் லீக் புதியதாக தொடங்கப்படவிருக்கிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இத்தொடரில், கிளாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், டப்ளின், பெல்பாஸ்ட், ரோட்டர்டாம் ஆகிய 6 நகரங்களை மையமாக கொண்ட 6 அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் ஸ்காட்லாந்தை பிரதிநிதித்துவம் படுத்தும் கிளாஸ்கோ நகரை மையமாக கொண்டு விளையாடவிருக்கும் கிளாஸ்கோ முகாஃபியான்ஸ் அணிக்கு முகாஃபி குரூப் நிறுவனம் பங்குதாரராகவும், தன்ஷா பத்ரா உரிமையாளராகவும் செயல்பட இருக்கிறது. இந்த அணியின் இணை உரிமையாளராக தான் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளார். மேலும் இத்தொடரின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “கிளாஸ்கோ முகாஃபியன்ஸ் அணியின் இணை உரிமையாளர் பொறுப்பை ஏற்பதன் மூலம், எனக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயம் தொடங்குகிறது. நம்பிக்கைக்குரிய உள்ளூர் திறமைகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் விளையாட்டை வலுப்படுத்தும் எதிர்கால நாயகர்களை வளர்க்கும் ஆற்றல் ETPL-க்கு உள்ளது. இந்தப் புதிய பயணத்தைத் தொடங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கெய்ல் கூறினார்.

