“பாதிதான் முடிஞ்சிருக்கு; நான் களத்துல நின்னா..” சீனியர் பவுலர்களுக்கு சவால்விட்ட 15 வயது பையன்!
15 வயதே ஆன பாலகனான வைபவ் சூர்யவன்ஷி, எல்லா பவுலர்களையும் தெறிக்கவிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் பேட்டி ஒன்றில், தெரிவித்திருக்கும் கருத்து சீனியர் பவுலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
19ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில், 10 அணிகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, அந்த அணியில் இடம்பெற்றுள்ள 15 வயதே ஆன பாலகனான வைபவ் சூர்யவன்ஷி, எல்லா பவுலர்களையும் தெறிக்கவிட்டு வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 246 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 236.54 ஆக உள்ளது. குறிப்பாக, மும்பைக்கு எதிரான போட்டி ஒன்றில், உலகின் முதன்மைப் பந்துவீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் ஓவரை, வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் முதன்முறையாக எதிர்கொண்டார். எனினும், பும்ராவின் முதல் பந்தைச் சந்தித்த வேகத்திலேயே அதை சிக்ஸருக்கு அனுப்பி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியக்கவைத்தார். அவருடைய பேட்டிங்கைக் கண்டு, பும்ராவே வியந்து சிரித்தார்.
இப்படி, பல சீனியர் பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அவர் பதம் பார்த்துவருகிறார். இதையடுத்து, அடுத்த ஐபிஎல் தொடரில் அதிகமான ஏலத்திற்கு அவர் விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவரை மும்பை அணி வாங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், ”நான் கிரீஸில் இருக்கும்வரை எதிரணியிடம் இருந்து வெற்றியைப் பறிக்கும் சக்தி என்னிடம் உண்டு" என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்திருப்பது பந்துவீச்சாளர்களைப் பதற்றமடையச் செய்துள்ளது. ஊடகம் ஒன்றில் அவர், “நான் எவ்வளவு நேரம் ஆடுகளத்தில் இருக்கிறேனோ, அவ்வளவு நேரமும் எனது திறமையால் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவேன். நான் கிரீஸில் இருக்கும்வரை எதிரணியிடம் இருந்து வெற்றியைப் பறிக்கும் சக்தி என்னிடம் உண்டு” என தெரிவித்துள்ளார். இது, எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து எதிர்காலக் கனவு குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், "இதுகுறித்து எனது தந்தையிடம் பேசினேன். அவர் சொன்னார், எனது கனவில் பாதிதான் இப்போது நனவாகியிருக்கிறது, மீதி பாதி இன்னும் பாக்கி உள்ளது. இந்திய சீனியர் அணிக்காக உலகக்கோப்பையில் விளையாடி, நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் அதே கனவுதான் எனக்கும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
15 வயதை சூர்யவன்ஷி எட்டியதைத் தொடர்ந்து, அவர் விரைவில் சீனியர் அணியில் இடம்பிடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
