CSK-லிருந்து விலகும் தோனி? முட்டி மோதிய பஞ்சாயத்து.. வெடித்த பங்கு விவகாரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அவ்வணியின் நம்பிக்கையைப் பெற்ற தோனிக்கும் இடையே தற்போது விரிசல் அதிகரித்திருக்கும் செய்திதான் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அப்படியென்ன, அவர்களுக்குள் நடந்தது? வாருங்கள், பார்க்கலாம்..
ஐபிஎல் அணிகளுள் ஒன்றாகச் சிறந்து விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையைப் பெற்றவர் தோனி. அவ்வணி தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்த அணி வளர்ச்சியடைவதற்கு முக்கியப் பங்காற்றி வருகிறார். குறிப்பாக, அவரது தலைமையில் அந்த அணி 5 கோப்பைகளை வென்றது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்டு வரும் தோனி, 2026 ஐபிஎல் தொடர் முழுவதிலும் விளையாடவில்லை. 19 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் ஒரு சீசன் முழுவதையும் அவர் தவறவிட்டது இதுவே முதல் முறையாகும். இது, அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
இந்த நிலையில், காயம் காரணமாகவும், வயதின் காரணமாகவும் அவர் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரது கோரிக்கையைச் சிஎஸ்கே நிர்வாகம் நிராகரித்ததாகவும், இதனால் இருதரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 2008-ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் முகமாக விளங்கும் தோனி, அணியில் 20% முதல் 25% வரையிலான பங்கை வாங்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகமோ, ஆரம்பத்தில் 3% முதல் 4% பங்கை மட்டுமே தர முன்வந்துள்ளது. பின்னர் தோனி தரப்பில் 18% எனக் குறைக்கப்பட்ட போதிலும், நிர்வாகம் 5.5%-க்கு மேல் வழங்க முன்வராததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே நிலவிவந்த பல ஆண்டுகால உறவிலும் சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக வீரர்கள் தேர்வு தொடர்பான முடிவுகளில் தோனியிடம் ஆலோசிக்கப்படவில்லை என்ற அதிருப்தி இருந்துவந்த நிலையில், இவ்விவகாரம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

