2026 IPL | தோனி விளையாடுவாரா? CSK நிர்வாகம் சொல்வதென்ன?
2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை சென்னை அணியின் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 44 வயதான தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த சீசனிலும் அவர் விளையாடுவார் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதனால், தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல், ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடர் தொடங்கும்போதும் சென்னை அணியின் கேப்டனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் தோனியின் ஓய்வு குறித்து பேசப்படும். அது தற்போதும் எதிரொலிக்கிறது. 44 வயதை எட்டியிருக்கும் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், அவர் கடந்த சில சீசன்களாகவே எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி, முதல்கட்டமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. ஏற்கெனவே அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, தோனியே மீண்டும் கேப்டனாக்கப்பட்டார்.
என்றாலும், அவர் தலைமையிலான நடப்பு சென்னை அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது. மேலும், அணியையும் தோனியையும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், தோனி பற்றிய ஓய்வும் கூடுதலாகச் சேர்ந்து கொண்டது. 43 வயதான அவர் கடைசி பேட்டிங் வரிசையில் இறங்கியது வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது. அப்போது ஓய்வு குறித்த வதந்தி தொடர்பாக பேசிய தோனி, “இந்த ஐபிஎல் முடிந்த பிறகு, என் உடல் தகுதி தாங்குமா என்பதைப் பார்க்க இன்னும் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது முடிவு செய்ய எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவதை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
”அவர் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவரை அவர் வேண்டாம் என்று சொல்லவில்லை, எனவே அடுத்த சீசனிலும் அவர் விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அவர் தொடர் முழுவதும் விளையாடுவாரா அல்லது சென்னையில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வை அறிவிப்பாரா? தொடர் முழுவதும் விளையாடினாலும் அணியின் கேப்டனாக நீடிப்பாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளன.
தோனி தலைமையிலான சென்னை அணி, ஐந்து முறை சாம்பியனும், 12 பிளேஆஃப் போட்டிகளில் பங்கேற்ற பெருமையும் கொண்டது.

