சாம்பியன்ஸ் டிராபி | பாக் vs நியூசி.. யாருக்கு சாதகம்.. இதுவரை நடந்தது என்ன? முழு அலசல்
PAK vs NZ
முத்தரப்பு கிரிக்கெட் தொடரை வென்ற சூட்டுடன் அதே கராச்சி மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இப்போட்டி மதியம் 2.30 மணியளவில் பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள தேசிய வங்கி கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகிறது.
நியூசிலாந்து அணி
நியுசிலாந்து அணி ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் தலைமையில் களமிறங்குகிறது. சாண்ட்னர் முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்றப்பின், இலங்கையில் நடந்த தொடரை நியூசிலாந்து வென்றது. தொடர்ந்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரையும் வென்றது. இரு வெற்றிகள் தந்த உத்வேகத்துடன் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி. அதுமட்டுமின்றி கோப்பையை வெல்லலாம் எனக் கணிக்கப்படும் பலமான அணிகளில் நியூசிலாந்து அணியும் ஒன்று. ஏனெனில், முத்தரப்புத் தொடர் பாகிஸ்தானில் நடந்ததும், அங்கு விளையாடி முத்தரப்புத் தொடர் கோப்பையை நியூசிலாந்து அணி வென்றதும் குறிப்பிடத்தக்கது.
மைக்கெல் பிரேஸ்வேல், மார்க் சாப்மேன், டேரில் மிச்செல், கிளன் ஃபிலிப்ஸ், நாதன் ஸ்மித் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் உள்ளனர். முத்தரப்பு தொடரின் போது முகத்தில் காயம் ஏற்பட்ட ரச்சினும் குணமடைந்தால் ஆல் ரவுண்ட் பலம் இன்னும் கூடும். கேன் வில்லியம்சன், டேவன் கான்வாய், டாம் லாதம், வில் யங் ஆகிய அனுபவ பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்கியுசன், மேட் ஹென்றி, வில் ஓ ரூர்க் ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் நியுசிலாந்து அணியில் இருக்கின்றனர். 2010க்கும் பிறகு முதல்முறையாக நியூசிலாந்து அணி டிம் சௌதி மற்றும் ட்ரெண்ட் போல்ட் இல்லாமல் ஒரு ஐசிசி தொடரை விளையாட இருக்கிறது.
பாகிஸ்தான் அணி
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், கடந்த தொடரின் இறுதியாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாக்கர் ஸமான் ஆகியோர் உள்ளனர். கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் பாபர் மற்றும் ஃபாக்கர் மட்டுமே பாகிஸ்தான் அணியில் உள்ளனர். 8 ஆண்டுகளுக்குள் பாகிஸ்தான் அணி ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்தித்துள்ளது. முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும்.
சவுத் ஷகீல், தய்யப் தாஹீர், உஸ்மான் கான் ஆகிய வீரர்கள் மத்திய வரிசையில் வலுச்சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் அஹா, ஃபாஹீம் அஷ்ரப், கம்ரன் குலாம், குஷ்தில் ஷா ஆகிய ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் உள்ளனர். ஷாஹீன் ஷா அப்ரிதி. நசீம் ஷா ஆகிய தரம்வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். இவர்களுடன் ஹாரிஸ் ரவுஃப், முஹமது ஹஸ்னைன் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கக் கூடியவர்கள். இவர்களுடன் சுழற்பந்துவீச்சாளர் அப்ரர் அஹமது பாகிஸ்தான் அணியில் உள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுவது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவைப்படும் நேரத்தில் கியரை மாற்றி ரன்களைச் சேர்க்க தவிர்ப்பது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும் மிக முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்குப் பிறகு ஐசிசி தொடரை நடத்துவதால் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் பாகிஸ்தான் வீரர்களுக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை..
தேசிய வங்கி கிரிக்கெட் அரங்கில் நடந்த கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்த அணிக்கு கூடுதல் பலன்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் சேஸிங் செய்த அணியே 3 போட்டிகளில் வென்றிருந்தது. பனிப்பொழிவும் இருக்குமென்பதால் இன்றைய போட்டியிலும் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கராச்சி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாகவே பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரையில் 118 ஒருநாள் போட்டுகளில் நேருக்கு நேராக விளையாடியுள்ளனர். அதில், பாகிஸ்தான் 61 போட்டிகளிலும், நியூசிலாந்து 53 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.