T20WC | நாளை கடைசி நாள்.. ”No Change.." - ஐசிசிக்கு பதிலளித்த வங்கதேசம்!
இந்தியாவில் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றத் தயாராக இல்லை என்று வங்கதேச அரசு மீண்டும் தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்வதில்லை என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக உள்ளது. இதுதொடர்பாகவும் ஐசிசிக்கு இரண்டு முறை கடிதம் எழுதியது. இதையடுத்து, டி20 உலகக் கோப்பை நெருக்கடி குறித்து விவாதிக்க ஐசிசி குழு வங்கதேசத்திற்குச் சென்றது.
அதன்பிறகு, உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கேட்டுக் கொண்டது. மேலும், போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தியது. தவிர, ஜனவரி 21ஆம் தேதி வரை வங்கதேச அணிக்கு இதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் அளித்துள்ளதாகவும், ஒருவேளை அவ்வணி விளையாட சம்மதிக்காவிட்டால், டி20 உலகக் கோப்பையில் அதற்குப் பதில் வேறு அணி சேர்க்கப்படும் எனவும் அது எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், வங்கதேசம் அதற்குப் பதிலளித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், “ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து நியாயமற்ற நிபந்தனைகளை விதித்து எங்கள் மீது அழுத்தம் கொடுக்க முயன்றால், நாங்கள் அந்த நிபந்தனைகளை ஏற்க மாட்டோம். கடந்த காலங்களில் பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்று கூறியதற்கும், ஐசிசி இடத்தை மாற்றியதற்கும் உதாரணங்கள் உள்ளன.
தர்க்கரீதியான அடிப்படையில் மைதானத்தை மாற்றுமாறு நாங்கள் கேட்டுள்ளோம். மேலும் நியாயமற்ற அழுத்தத்தைக் கொடுத்து இந்தியாவில் விளையாட எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. ஆனால், எங்களுக்குப் பதில் ஸ்காட்லாந்து அந்த இடத்தில் சேர்க்கப்படுமா என்பது எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.

