மீண்டும் மீண்டும் ICC இடமிருந்து வந்த செய்தி.. வங்கதேசம் முடிவை மாற்றுமா..?
வங்கதேசத்தில் நடந்த வன்முறையால் ஐபிஎல் தொடரில் முஸ்தபிசூர் ரஹ்மானை நீக்கியது கொல்கத்தா அணி. இதனால் வங்கதேசம் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஐசிசி மற்றும் பிசிசிஐ குழப்பத்தில் உள்ள நிலையில், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் வந்து ஐபிஎல் போட்டியில் விளையாட கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
பிசிசிஐயின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வந்து விளையாட மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
இந்தசூழலில் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 3 வாரங்களே மீதமுள்ள நிலையில் என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இருந்துவருகின்றன.. ஆக்கப்பூர்வமான முடிவுக்காக ஐசிசி மற்றும் வங்கதேசம் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
மீண்டும் மீண்டும் ஐசிசி வைத்த கோரிக்கை..
வங்கதேசம் இந்தியாவிற்கு வந்து உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என இரண்டு முறை ஐசிசிக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்தபதிலும் வராத நிலையில், கொல்கத்தாவில் நடக்கும் வங்கதேச போட்டிகளை சென்னைக்கு மாற்றும் முடிவில் ஐசிசி இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கதேச விளையாட்டு ஆலோசகர், எங்கள் முடிவில் மாற்றம் இருக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தசூழலில் ஐசிசி உடன் வங்கதேச வாரிய அதிகாரிகள் நடத்திய வீடியோ மீட்டிங்கிற்கு பிறகு பிசிபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, இந்தியாவுக்கு பயணம் செய்யப் போவதில்லை என்ற முடிவு குறித்த தனது நிலைப்பாட்டை BCB மீண்டும் உறுதிப்படுத்தியது. வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ICC பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வாரியம் மீண்டும் வலியுறுத்தியது.
அதற்கு ஐசிசி தரப்பில், போட்டிகளுக்கான திட்டம் ஏற்கனவே முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதை கருத்தில் கொண்டு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என ஐசிசி வலியுறுத்தியது. இருப்பினும் வங்கதேச வாரியத்தின் நிலைப்பாடு மாறாமல் இருக்கும் நிலையில், சாத்தியமான தீர்வுகளை ஆராய்வதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வங்கதேச வாரியம் தங்களுடைய வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது, அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எட்ட ICC உடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுவருகிறது என்று வங்கதேசம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

