ஜன.21 கடைசித் தேதி.. இந்தியாவில் விளையாடுமா? வங்கதேசத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஐசிசி!
உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்வதில்லை என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக உள்ளது. இதுதொடர்பாகவும் ஐசிசிக்கு இரண்டு முறை கடிதம் எழுதியது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை நெருக்கடி குறித்து விவாதிக்க வங்கதேசத்திற்குச் சென்ற ஐசிசி குழுவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஜனவரி 21ஆம் தேதி வரை வங்கதேச அணிக்கு இதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் அளித்துள்ளதாகவும், அதற்குப் பிறகு உலக கிரிக்கெட் அமைப்பு வங்கதேசத்தை மாற்ற முயற்சிக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விளையாட சம்மதிக்காவிட்டால், டி20 உலகக் கோப்பையில் தரவரிசையில் குறைந்த அணியாக மாற்றப்படும் அபாயம் உள்ளது என்றும், அதற்குப் பதில் வேறு அணி சேர்க்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது. குறுகிய காலத்தில் போட்டித் திட்டத்தை மீண்டும் மாற்ற விருப்பமில்லை எனவும் ஐசிசி குறிப்பிட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளதால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. முன்னதாக, பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. அப்போது, இந்தியாவின் கோரிக்கையை ஐ.சி.சி ஒப்புக்கொண்டு, அவர்களின் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.

