’சாம்பியன் ஆகவே சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்கிறோம்..’ – வங்கதேச கேப்டன் நம்பிக்கை!
சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரையில் மற்ற ஐசிசி தொடர்களை போல நிறைய அணிகள் பங்குபெறும் தொடர் கிடையாது. ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்கும் ஒரு தரமான தொடராகும்.
அதனால் தான் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டிக்கு சமமானது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தான் சாம்பியன்ஸ் டிராபி குறித்து பேசியிருக்கும் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, பங்கேற்கும் 8 அணிகளும் தரம் வாய்ந்த அணிகள், எந்த அணியாலும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியும், எங்கள் அணி மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சாம்பியன் ஆகவே செல்கிறோம்..
வங்கதேச அணி குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி துபாயில் இந்தியாவை எதிர்கொள்ளும் வங்கதேச அணி, ராவல்பிண்டியில் பிப்ரவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்நிலையில் வங்கதேச அணி இந்தியாவுடன் மோத துபாய்க்கு புறப்பட்டு சென்றிருக்கும் நிலையில், வங்கதேச கேப்டன் ஷாண்டோ சாம்பியன்ஸ் டிராபி குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நாங்கள் சாம்பியனாக மாறவே சாம்பியன்ஸ் டிராபிக்குச் செல்கிறோம். இந்த தொடரில் விளையாடும் எட்டு அணிகளுமே சாம்பியன்களாக மாறத் தகுதியானவை. அனைத்தும் தரமான அணிகள், அதேநேரத்தில் கோப்பையை வெல்ல எங்கள் அணிக்கு திறமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
போட்டியை நினைத்து யாரும் கூடுதல் அழுத்தத்தை உணர மாட்டார்கள், அனைத்து வீரர்களுக்கும் சாம்பியனாகும் இலக்கு இருக்கிறது. எங்கள் அணி பேட்டர்கள், வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைத்திலும் பலமாக உள்ளது. எல்லோரும் தங்கள் பணியை சரியாக செய்தால் போதும், எந்த அணியாக இருந்தாலும் எங்களால் வீழ்த்த முடியும்" என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.