மகளிர் ஆஷஸ் | 180 ரன்னை டிஃபண்ட் செய்து ஆஸி. அணி வெற்றி.. ஒருநாள் தொடரை இழந்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவை எட்டியுள்ளன. இரண்டிலும் வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா..
கடந்த ஜனவரி 12-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 60 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் கிம் கர்த் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அலானா கிங் இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி போட்டியை தலைகீழாக திருப்பினர்.
கிம் கர்த் 3 விக்கெட்டுகளும், அலானா கிங் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்த 159 ரன்களுக்கே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.