ஃபேர்வெல் ODI போட்டி| 158 ரன்கள் அடித்த அலிசா.. 409 ரன்கள் குவித்த ஆஸி.! இந்தியா தோல்வி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அலிசா ஹீலியின் 158 ரன்கள் மற்றும் பெத் மூனியின் 106 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலியா 409 ரன்கள் குவித்தது. இந்தியா 224 ரன்கள் மட்டுமே சேர்த்ததால், ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்றது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என ஆஸ்திரேலியா மண்ணில் வென்ற இந்திய அணி சாதனை படைத்தது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் டாமினேட் செய்த ஆஸ்திரேலியா 0-2 என வென்று பதிலடி கொடுத்தது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
2 பேர் சதம்.. 409 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்து மிரட்டியது. தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலி 27 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 98 பந்தில் 158 ரன்கள் குவித்தார்.
கடைசிவரை களத்தில் நின்று 84 பந்தில் 106 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பெத் மூனி ஆஸ்திரேலியாவை பிரமாண்ட டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
410 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனா 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொதப்ப 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
185 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 3-0 என வென்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

