”சேவாக் போல அடிக்க சொல்லுங்க..” கடைசி நேரத்தில் மெக்கல்லம் கொடுத்த அட்வைஸ்!
இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியில், ரெஹான் அகமது 7 பந்தில் 19 ரன்கள் அடித்து இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்தார். பயிற்சியாளர் மெக்கல்லம், 'சேவாக் போல அடிக்க சொல்லுங்க' என்ற அறிவுரையை ரெஹானுக்கு வழங்கியதாக கூறினார். இதனால், பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.
நேற்று இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வென்றால் நேரடியாக அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து பெற்றுவிடும், ஒருவேளை நியூசி தோற்றால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் போட்டியில் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
இந்தசூழலில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டுக்கு பிறகு ஆட்டத்திலிருந்து விலகிசென்றது போல இருந்தது. கடைசி 3 ஓவருக்கு 43 ரன்கள் தேவையாக இருந்தபோது, 18வது ஓவரை வீசிய க்ளென் பிலிப்ஸ் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை விட்டுக்கொடுக்க ஆட்டம் தலைகீழாக திரும்பியது.
களத்தில் நின்ற வில் ஜாக்ஸ் தான் அடிப்பார் என்று எதிர்ப்பார்த்த போது, 8வது வீரராக களமிறங்கிய ரெஹான் அகமது 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என பறக்கவிட்டு 7 பந்தில் 19 ரன்களை அடித்து மிரட்டினார். அவருடைய அந்த ஆட்டம் தான் இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச்சென்றது.
இந்தச்சூழலில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பிறகு பேசியிருக்கும் ரெஹான் அகமது, களமிறங்குவதற்கு முன்பு பயிற்சியாளர் மெக்கல்லம் தன்னிடம் ஒரு மெசேஜை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பேசியிருக்கும் ரெஹான், உண்மையில் பிரெண்டன் மெக்கல்லம் எனக்கு கீழே இருந்து வால்கி டாக்கி மூலம் செய்தி ஒன்றை அனுப்பினார். அதில், 'ரெஹானை சேவாக் மாதிரி அடிக்கச் சொல்லுங்கள்' என்று கூறியிருந்தார் என தெரிவித்துள்ளார்.
அதிரடிக்கு பெயர்போன விரேந்திர சேவாக்கின் பெயர் தற்போதும் பயன்படுத்துவதை இந்திய ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

