இன்டெலை விஞ்சிய ஏ.எம்.டி... சி.இ.ஓ லிசா சு-வின் வெற்றிக்கதை!
உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ), சிப் தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டி நிறுவனத்தின் பெண் சிஇஓ லிசா சு-வை (Lisa Su, CEO of AMD) தேர்ந்தெடுத்துள்ளது.
2014-ஆம் ஆண்டு ஏஎம்டி-யின் சிஇஓ-வாக பொறுப்பேற்றவர் லிசா சு. அப்போது ஏஎம்டி கடும் நஷ்டத்தில் இருந்தது. நிறுவனம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்ற நிலைமை. இத்தகைய நெருக்கடியில் இருந்த நிறுவனத்தை, இன்று உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறார் லிசா சு. அதுவும் சிப் தயாரிப்பில் ஜாம்பவானான இன்டெல் (Intel)-ஐ பின்னுக்குத் தள்ளி!
லிசா சிஇஓ-வாக பொறுப்பேற்ற சமயத்தில் ஏஎம்டி-யின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டாலராக (ரூ.17 ஆயிரம் கோடி) இருந்தது. இன்று அது 200 பில்லியன் டாலராக (ரூ.17.17 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. வெறும் பத்து ஆண்டுகளில் 100 சதவீத வளர்ச்சி.
கடும் போட்டி நிறைந்த செமிகண்டக்டர் துறையில், பெரும் சரிவிலிருந்த நிறுவனத்தை லிசா சு மீட்டெடுத்தது எப்படி?
திக்குதெரியாமல் திணறிய ஏஎம்டி
இன்று உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்பு என்றால் அது செமிகண்டக்டர்தான். இத்துறைதான் உலகின் தொழில்நுட்ப நகர்வைத் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. கணினி, மொபைல் முதல் கார், மருத்துவ உபகரணங்கள் என எல்லா தளங்களிலும், சிப் என்று அழைக்கப்படும் செமிகண்டக்டர் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
1971-ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனம் உலகின் முதல் மைக்ரோபிராசஸரை உருவாக்கியது. அதுவரையில், கணினிகள் ஒரு முழு அறையை ஆக்கிரமிக்கும் அளவுக்கு மிகப் பெரியவையாக இருந்தன. இன்டெலின் மைக்ரோபிராசஸர் கண்டுபிடிப்புக்குப் பிறகே கணினியின் வடிவம் சிறியதாக மாறத் தொடங்கியது.
இன்டெல் நிறுவனம் தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், 1969-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டா கிளாரா நகரில் ஏஎம்டி நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இன்டெல் நிறுவனத்துக்கான சிப்களை ஏஎம்டி தயாரித்து வழங்கியது. பிற்பாடு தனக்கான சொந்த சிப்பை உருவாக்கியது. ஏஎம்டி-க்கு அப்போது எந்தத் தனித்துவமும் கிடையாது. காரணம், இண்டெல் என்ன சிப்பைத் தயாரிக்கிறதோ அதை நகல் செய்யும் வேலையைத்தான் ஏஎம்டி செய்துவந்தது. இதனால், அந்த சமயத்தில் ஏஎம்டி சிப்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.
மறுபுறம், இன்டெலோ ஆண்டுக்கு ஆண்டு அதிவேக சிப்களை அறிமுகம் செய்து கணினித் துறையில் மாபெரும் புரட்சியை நிகழ்த்திவந்தது. குறிப்பாக, 1990-களில் இன்டெல் உச்சத்தில் இருந்தது. இணையம் பரவலாக அறிமுகமாகத் தொடங்கிய காலகட்டம் அது. கணினி விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கிய சமயம். பெரும்பான்மையான கணினிகளில் இன்டெல் சிப்களே பயன்படுத்தப்பட்டன. 2000-ம் ஆண்டில் இன்டெலின் சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலரைத் தாண்டி உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.
மறுபுறம், சந்தையில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் ஏ.எம்.டி செயல்பட்டு வந்தது. 2000-களின் இறுதியில், ஏ.எம்.டி கடும் நஷ்டத்தை எதிர்கொண்டது. இந்த நிலைமை தொடரும்பட்சத்தில் விரைவில் நிறுவனம் மூடப்பட்டுவிடும் என்று பேச்சு எழ ஆரம்பித்தது.
இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார் ஏஎம்டி நிறுவனர் ஜெர்ரி சாண்டர்ஸ். அவர் முன்பு அப்போது இருந்த ஒரே வாய்ப்பு லிசா சு.
ஏஎம்டிக்கு கிடைத்த மீட்பர்!
லிசா சு தைவானில் பிறந்தவர். அவர் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிடுகிறது. லிசாவின் படிப்பு எல்லாம் அமெரிக்காவிலேயே அமைகிறது.
அவரது தந்தை புள்ளியியலாளர். தாய் கணக்கியல் துறையில் பணியாற்றிவிட்டு பிற்பாடு தொழில்முனைவர் ஆனவர். லிசாவுக்கு பொறியியல் மீது சிறு வயதிலேயே ஆழ்ந்த ஆர்வம் வந்துவிடுகிறது. அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற எம்ஐடி கல்லூரியில் மின்துறையில் பட்டம் பெறுகிறார். அங்குதான் அவருக்கு முதன்முதலாக சிப் அறிமுகமாகிறது.
ஒரு சிறிய பொருள், அவ்வளவு பெரிய கணிதச் செயல்பாடுகளை கண நேரத்தில் செய்து முடிப்பது அவரை பரவசத்தில் ஆழ்த்துகிறது. தொடர்ந்து செமிகண்டக்டர் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார்.
கல்லூரி படிப்புக்குப் பிறகு டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் (Texas instruments), ஐபிஎம் (IBM), ஃப்ரீஸ்கேல் செமிகண்டக்டர் (Freescale semiconductor) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். இந்நிறுவனங்கள் மூலம் செமிகண்டக்டர் துறையில் அவருக்கு ஆழ்ந்த அனுபவம் கிடைக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, 2012-ஆம் ஆண்டு ஏஎம்டி நிறுவனத்தில் துணைத் தலைவராக இணைந்தார். ஏஎம்டி கடும் சரிவை எதிர்கொண்டுவந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு அதன் சிஇஓ-வாக நியமிக்கப்படுகிறார். அப்போது அவருக்கு வயது 45.
ஏஎம்டியின் பாய்ச்சல்!
அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவுடன் இருந்தார் லிசா. தன் ஊழியர்களிடம் மூன்று விஷயங்களை முன்வைத்தார். அவை,
1. தனித்துவமிக்க மிகச் சிறந்த தயாரிப்பை உருவாக்க வேண்டும்.
2. வாடிக்கையாளர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும்.
3. நிறுவன வணிகத்தை எளிமையாக்க வேண்டும்.
அந்த சமயத்தில் ஏஎம்டி இயக்குநர்கள் குழுவில் இருந்தவர்கள், இனி நாம் மொபைல் போன்களுக்கான சிப் தயாரிப்பில் இறங்கலாம் என்று பரிந்துரைத்தனர். ஆனால், அந்த ஐடியாவை லிசா மறுத்தார்.
“நம்முடைய துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன தொழில்நுட்பம் தேவைப்படும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அதுதான் இந்தத் துறையில் தாக்குப்பிடித்து நிற்பதற்கான வழி” என்றவர்,
கணினிக்கான சிப் உருவாக்கத்தில் இனி பெரிய வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து, டேட்டா சென்டர்களுக்கான சிப்பை உருவாக்க முடிவு செய்தார். “இதுவரையில் சந்தையில் இருந்த சிப்களை விடவும் 40 சதவீதம் வேகம் கொண்ட அதிதிறன் சிப்களை நாம் உருவாக்க வேண்டும்” என்பதை இலக்காக நிர்ணயித்தார். இதற்கென்று செமிகண்டக்டர் துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டவர்களை ஏஎம்டி நிறுவனத்தில் இணைத்துக் கொண்டார். ஏஎம்டி பொறியாளர் குழு அதிதிறன் கொண்ட சிப்பை உருவாக்கும் பணியில் இறங்கியது. நிறுவனம் நஷ்டத்திலிருந்தபோதும், அந்த அதிவேக சிப் உருவாக்கத்துக்காக பொறுமையுடன் காத்திருந்தார் லிசா.
2017-ம் ஆண்டு ஏஎம்டி அதன் Zen Architecture சிப்களை அறிமுகம் செய்தது. விலையோ, இன்டெலின் சிப்பைவிட பாதிதான். ஆனால், செயல்திறனோ இன்டலைவிட அதிவேகம். செமிகண்டக்டர் துறையில் பெரும் அதிர்வை அந்த சிப் உருவாக்கியது. டேட்டா சென்டர் வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏஎம்டி சிப்களை வாங்கத் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, இன்டெலின் ஆதிக்கத்துக்கு சவால் விட ஆரம்பித்தது லிசா சு தலைமையிலான ஏஎம்டி.
2022-ம் ஆண்டு, இன்டெலைவிடவும் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்து ஏஎம்டி வரலாறு படைத்தது. “ஏஎம்டி இப்படியொரு வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் என்று இத்துறையில் எவரும் நினைத்திருக்கக் கூடமாட்டார்கள்” என்றார் அதன் நிறுவனர்.
தற்போது இன்டெலின் சந்தை மதிப்பு 88 பில்லியன் டாலர் (7.48 லட்சம் கோடி ரூபாய்!). ஏஎம்டியின் சந்தை மதிப்பு 202 பில்லியன் டாலர் (ரூ.17.17 லட்சம் கோடி).
இன்று உலகின் மிக சக்திவாய்ந்த சூப்பர் கம்யூட்டர்கள் இரண்டில் ஏஎம்டி சிப்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கூகுள், மைக்ரோ சாஃப்ட், அமேசான், மெட்டா தொடங்கி டெஸ்லா, நாசா வரை ஏஎம்டி சிப்பைப் பயன்படுத்துகின்றன.
அடுத்த பயணம்...
தற்போது ஏஎம்டி புதிய போட்டியாளரை எதிர்கொண்டுள்ளது. இன்று உலகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) நோக்கி மிகத் தீவிரமாக நகர்ந்துவருகிறது. ஏஐ-க்கான சிப் தயாரிப்பில் அமெரிக்காவின் என்விடியா நிறுவனமே முன்னிலை வகிக்கிறது. உலகின் செயற்கை தொழில்நுட்ப சந்தையில் 95 சதவீதம் என்விடியா (NVIDIA) வசமே உள்ளது.
2028-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான சிப் சந்தை 500 பில்லியன் டாலராக உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஏஐ சந்தையை நாம் தவறவிடக் கூடாது” என்ற லிசா சு, தற்போது என்விடியாவுக்கு நிகரான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.