2024-ம் ஆண்டு சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. பும்ரா இல்லை.. ஐசிசி விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங்!
டி20 கிரிக்கெட்டில் சிறந்த இந்திய பவுலராக வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முத்திரை பதித்து வருகிறார். இதுவரை 61 டி20 போட்டிகளில் விளையாடி 97 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அர்ஷ்தீப் சிங், டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தும் முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை நெருங்கிவரும் அர்ஷ்தீப் சிங், 2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை வென்று அசத்தியுள்ளார்.
ஐசிசி விருதை வென்ற அர்ஷ்தீப் சிங்..
2007-ம் ஆண்டுக்கு பிறகு 16 வருடங்கள் கழித்து இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை வென்று அசத்தியது. அதில் இந்திய அணியின் லீடிங் விக்கெட் டேக்கராக 17 விக்கெட்டுகளுடன் அர்ஷ்தீப் சிங் முதலிடம் பிடித்தார். இறுதிப்போட்டியிலும் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் 2024-ம் ஆண்டு 18 போட்டிகளில் விளையாடியிருந்த அர்ஷ்தீப் 7.49 எகனாமியுடன் 10.80 ஸ்டிரைக்ரேட்டில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் டிராவிஸ் ஹெட், பாபர் அசாம், சிக்கந்தர் ராசா முதலிய மூன்று வீரர்களுடன் ஐசிசி விருதுக்கு போட்டியிட்ட அர்ஷ்தீப் சிங், 2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசியின் சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட்டராக அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பெண்களுக்கான சிறந்த டி20 கிரிக்கெட்டராக நியூசிலாந்தின் மெலி கெர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.