ஆஸ்திரேலியா ஓபன் | No.1 வீராங்கனையை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!
2025-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரானது ஜனவரி 6 முதல் தொடங்கி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடந்துவந்த ஆஸ்திரேலியா ஓபன் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, நேற்று கலப்பு இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில், இன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், 2024 மற்றும் 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டுமுறை வென்று நடப்பு சாம்பியனான இருக்கும் பெலராஸ் வீராங்கனை அரினா சபலெங்கா, அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸை எதிர்கொண்டு விளையாடினார்.
முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மேடிசன் கீஸ்..
தொடர்ச்சியாக 3 முறை ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் வென்று 26 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வீராங்கனையாக சாதனை படைக்கும் எண்ணத்தில் அரினா சபலெங்கா களம் கண்டார். ஆனால் முதல்முறையாக ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வெல்லும் பெரிய கனவோடு மேடிசன் கீஸ் களம் புகுந்தார்.
இரண்டு வீராங்கனைகளுக்கும் இடையே பரபரப்பாக இறுதிப்போட்டி நடைபெற்றது. முதல் செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் அபாரமாக செயல்பட்டு 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த நடப்பு சாம்பியன் அரினா 6-2 என செட்டை கைப்பற்ற ஆட்டம் சூடுபிடித்தது. 1-1 என இரண்டு செட்களும் சமனில் முடிய, சாம்பியன் பட்டத்தை யார் வெல்லபோகிறார்கள் என்ற அழுத்தம் நிறைந்த கட்டமாக மூன்றாவது செட் தொடங்கியது.
மூன்றாவது செட்டில் இரண்டு வீராங்கனைகள் போட்டிப்போட்டுக்கொண்டு விளையாடினார். இறுதிவரை யாருக்கு வெற்றி செல்லும் என்ற பரபரப்பானது தொற்றிக்கொண்டது. ஆனால் முதல் பட்டத்திற்காக விட்டுக்கொடுக்காமல் விளையாடிய அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-5 என்ற கணக்கில் வென்று மகுடம் சூடினார்.
இதன்மூலம் 2025 ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மகுடம் சூடினார். அதுமட்டுமில்லாமல் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ரேங்கிங் வீராங்கனைகளை நாக்அவுட் போட்டிகளில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் மேடிசன் படைத்துள்ளார். இறுதிப்போட்டி நடந்தபோது 19வது ரேங்கிங்கில் மேடிசன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.