நங்கூரமிடும் இளம் ரத்தம்.. ஆசிய கோப்பையில் தொடர் சாதனைகள்! அபிஷேக் ஆடும் தாண்டவம்..
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூறாவளியாக சிக்ஸர்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா. யார் இந்த அபிஷேக் சர்மா? இவரது வளர்ச்சியில் யுவராஜ் சிங் பங்களிப்பு என்ன? நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் அவரது ஆட்டம் எப்படி இருந்து வருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 டி20 பேட்டராக இருந்துவரும் இந்திய நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, 2000-ம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் பிறந்தவர். அவருடைய தந்தை ராஜ்குமார் சர்மா 22 வயதுக்குட்பட்டோருக்கான வடக்கு மண்டல அணியில் விளையாடியவர். உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி கவனம்பெற்ற அபிஷேக் சர்மா 2018-ம் ஆண்டு பிரித்வி ஷா, சுப்மன் கில் இடம்பெற்றிருந்த அண்டர் 19 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்து, 17 வயதில் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற கையோடு ஐபிஎல் ஏலத்திற்கு சென்றார்.
2018-2019 காலகட்டத்தில் சாதாரண ஒரு வீரராக இருந்த அபிஷேக் சர்மாவை, அவருடைய ரோல் மாடலான யுவராஜ் சிங் மெருகேற்றும் வேலையில் இறங்கினார். பஞ்சாபை சேர்ந்த அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சிங்தான் ரோல் மாடல் மற்றும் ஐடியல். 2019 கோவிட் காலத்தில் யுவராஜ் சிங்கின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற அபிஷேக் சர்மா, தன்னுடைய பேட்டிங் ஸ்கில்லையும், பேட் ஸ்பீடையும் யுவராஜ் சிங் ஆலோசனையில் மாற்றிக்கொண்டார். அதுவரை ஒரு சாதாரண வீரராக இருந்த அபிஷேக், அதற்குபிறகு ஒரு சிதறடிக்கும் வீரராக உருமாறினார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல், தினசரி எப்படி உடலை தயார் செய்யவேண்டும் என்ற டெய்லி ரொட்டீனையும் யுவராஜ் சிங் ஆலோசனைப்படியே தற்போதும் பின்பற்றிவருகிறார் அபிஷேக் சர்மா. யுவராஜ் சிங்கிற்கு இருந்த பேட் ஸ்விங் அபிஷேக் சர்மாவிற்கும் இருப்பதால் அவரை யுவராஜ் சிங் 2.O என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
அபிஷேக் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் ஜூலை 2024-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக கிடைத்தது. தனது முதல் போட்டியில் டக்அவுட்டில் வெளியேறிய அபிஷேக் சர்மா, அடுத்த ஆட்டத்தில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என விளாசி 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அன்று ஆடிய அவருடைய அதிரடியான இன்னிங்ஸ் டி20 கிரிக்கெட்டில் அவருடைய அறிமுகத்தை விதைத்தது. 2024-ல் மட்டும் அவர் 44 டி20 சிக்சர்களை பறக்கவிட்டார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட்டுக்கு நிகராக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இவரது சிக்ஸ் ஹிட்டிங் பவர் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.
தொடர்ச்சியாக அதே ஃபார்ம் உடன் ஆசிய கோப்பை தொடரில் களம் கண்டார் அபிஷேக் சர்மா. ஐக்கிய அமீரகத்திற்கு எதிரான முதல் போட்டியிலே 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசியவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மிரட்டினார். ஓமனுக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 38 ரன்கள் விளாசியிருந்தார். சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கதகளி ஆடியிருந்தார் அபிஷேக். 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அந்த வரிசையில் கடைசியாக நேற்று நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரானப் போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பிய போதும் தனி ஒருவனாக அதிரடி காட்டி வெறும் 37 பந்துகளில் 75 ரன்கள் விளாசி தள்ளினார். 5 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஒரு போட்டியில் கூட தவறவிடாமல் வெளுத்து வாங்கி வரும் அபிஷேக் தற்போதைய ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது வரை 5 இன்னிங்ஸில் ஆடியுள்ள அவர் 248 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 49 ஆக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 206.66 என மற்ற எந்த ஒரு வீரரையும் விட அதிகமாக இருக்கிறது.
மேலும், அபிஷேக் சர்மா நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் தனித்துவமான சாதனையைச் செய்திருக்கிறார். 5 இன்னிங்ஸில் மொத்தமாக 17 சிக்சர்களை விளாசியிருக்கிறார். ஆசிய கோப்பை தொடர் ஒன்றில் அதிகபட்ச சிக்சர்களை விளாசியவர் என்ற சாதனை இதுவரை இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யாவிடம் இருந்தது. 2008 ஆம் ஆண்டு நடந்த தொடரில் ஜெயசூர்யா 14 சிக்சர்களை விளாசியிருந்தார். ஆனால், தற்போது அந்த சாதனையை முறியடித்து அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்திருக்கிறார்.
அதேசமயத்தில், T20 ஆசியக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து இரு போட்டிகளில் அரைசதம் அடித்த இரண்டாவது கிரிக்கெட் வீரராக அபிஷேக் மாறியிருக்கிறார். 2022 ஆசியக் கோப்பையில் விராட் கோஹ்லி இந்த சாதனையை நிகழ்த்தினார்; அப்போது பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். தற்போது அபிஷேக்கும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.