ICC தரவரிசை பட்டியல்.. ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஆடவர் சர்வதேச டி20 பேட்டிங் வரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர், சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த தொடரில் அவர், 30, 31, 38, 74, 75 என ரன்களைத் தொடர்ச்சியாக எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில், 2வது இடத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் உள்ளார். 3வது இடத்தை இன்னொரு இந்திய சகவீரர் திலக் வர்மா பிடித்துள்ளார்.
4வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் உள்ள நிலையில், 5வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் உள்ளார். 6வது இடத்தை இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் பிடித்துள்ளார். அதேபோல் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி வீரரான வருண் சக்கரவர்த்தி 747 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஜேக்கப் டஃபி, அகேல் ஹொசைன், அப்ரார் அகமது, ஆடம் ஜம்பா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதேபோல் டி20 ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்திகா பாண்டியா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் சுப்மன் கில், 2வது இடத்தில் ரோகித் சர்மா, 4வது இடத்தில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் ஒருநாள் தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா முதல் இடத்தையும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. டெஸ்ட்டில் மட்டும் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இதில், 4வது இடத்தில் இந்தியா உள்ளது.
மறுபுறம் ஒருநாள் பெண்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் உள்ளார். ஒருநாள் பவுலிங் தரவரிசைப் பட்டியலில் தீப்தி சர்மா 5வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல், பவுலிங்கில் டி20யில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையிலும் ஒருநாள் போட்டிகளில் தீப்தி சர்மா 4வது இடத்தையும், டி20யில் 3வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆனால், இவ்விரு போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.