உலகசாதனையை உடைத்த அபிஷேக் சர்மா.. குறைவான பந்தில் 1000 ரன்கள் அடித்து வரலாறு!
அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 528 பந்துகளில் 1000 ரன்களை அடித்து புதிய உலகசாதனையை படைத்துள்ளார். 28 இன்னிங்ஸ்களில் 36 சராசரியுடன் 989 ரன்கள் குவித்துள்ள அவர், 189 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி, அதிக ஸ்டிரைக்ரேட் வைத்திருக்கும் வீரர்களில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய அணியின் 25 வயது இளம்வீரரான அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.. இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாடி வரும் அபிஷேக் சர்மா, தொடக்க வீரராக 28 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 36 சராசரியுடன் 989 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும்..
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து தற்போதுவரை 189 பேட்டிங் ஸ்டிரைக்ரேட்டில் மிரட்டிவரும் இடதுகைவீரரான அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்டிரைக்ரேட் வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்..
இந்தசூழலில் அதிவேகமாக ஆயிரம் சர்வதேச டி20 ரன்களை கடந்திருக்கும் அபிஷேக் சர்மா புதிய உலகசாதனையை படைத்து அசத்தியுள்ளார்..
சூர்யாவின் உலகசாதனையை உடைத்த அபிஷேக் சர்மா..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருக்கும் அபிஷேக் சர்மா, உலகக்கோப்பைக்கு முன்னதாக தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிக்காட்டிவருகிறார்..ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் ஒரு அரைசதத்துடன் 140 ரன்கள் அடித்து, தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக் நீடிக்கிறார்..
இந்நிலையில் கப்பா மைதானத்தில் இன்று தொடங்கப்பட்ட 5வது டி20 போட்டியில் 13 பந்தில் 23 ரன்கள் அடித்த அபிஷேக், டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனையை படைத்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 528 பந்துகளில் ஆயிரம் ரன்களை விளாசிய சர்வதேச வீரர் என்ற புதிய உலகசாதனையை படைத்தார். இதற்குமுன் 573 பந்துகளுடன் முதலிடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் சாதனையை உடைத்தார்..
அதுமட்டுமில்லாமல் இன்னிங்ஸ்கள் அடிப்படையில் 28 இன்னிங்ஸில் ஆயிரம் டி20 ரன்களை கடந்திருக்கும் அபிஷேக், விராட் கோலிக்கு (27 இன்னிங்ஸ்கள்) பின் இன்னிங்ஸ்கள் அடிப்படையில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த 2வது இந்திய வீரராக சாதனை படைத்தார்..

