’தோல்வி இன்னும் என்னை நோகடிக்கிறது..’ இந்தியா உடனான போட்டி குறித்து அலிசா ஹீலி வேதனை!
2025 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்றது ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலிக்கு இன்னும் வேதனையாக உள்ளது. இந்தியா 341 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127* ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை வெளியேற்றினார். இந்த தோல்வி இன்னும் மனதை நோகடிக்கிறது என ஹீலி தெரிவித்துள்ளார்.
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஆகச்சிறந்த போட்டியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி அமைந்தது.. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 338 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டது.. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 119 ரன்கள் குவித்து அசத்தினார்..
மகளிர் உலகக்கோப்பை மட்டுமல்ல, ஆண்-பெண் கிரிக்கெட் என எந்த போட்டியிலும் நாக்அவுட் போட்டியில் 339 ரன்களை எந்த அணியும் சேஸ்செய்து வென்றதாக வரலாறு இல்லை..
ஆனால் 341 ரன்கள் குவித்ததோடு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அத்தகைய வரலாற்றை படைத்தது இந்திய மகளிர் அணி.. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127* ரன்கள் குவித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய ஆட்டத்தை ஆடினார்.. ஒரு வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி 7 முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றியது.. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பை வென்று மகுடம் சூடியது..
தோல்வி இன்னும் என்னை வேட்டையாடுகிறது..
இந்தசூழலில் இந்தியாவிடம் அரையிறுதிப்போட்டியில் தோற்று ஒரு வாரம் ஆனபோதும், இன்னும் அந்த தோல்வி நோகடிப்பதாக ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து சமீபத்திய உரையாடலில் பேசியிருக்கும் அலிசா ஹீலி, நான் பொய் சொல்ல மாட்டோன், தற்போது நன்றாக இருக்கிறேன்.. உலகக்கோப்பை தொடர் முழுவதும் நாங்கள் எங்கள் திறமைக்கும் அதிகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம், ஒவ்வொரு வீரரும் அவர்களுக்கான வேலையை சரியாக செய்தார்கள்.. ஆனால் எங்களால் இந்தியா என்ற தடையை தாண்டி செல்லமுடியவில்லை..
அரையிறுதிப்போட்டியில் நாங்கள் உண்மையில் குறைவான டோட்டலை அடித்துள்ளோம் என்றே நினைத்தேன். எலிஸ் பெர்ரியும், லிட்ச்ஃபீல்ட்டும் பேட்டிங் செய்யும் போது 350 ரன்களை கடந்துவிடுவோம் என நினைத்தோம்.. அப்படி நடந்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும்..
இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127* ரன்களை குவித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் கேட்ச்சை இரண்டு முறை தவறவிட்டது எங்களுக்கு பாதகமாக மாறியது” என்று பேசினார்..
மேலும் தன்னுடைய விக்கெட் விழுந்தபோது மழையால் சைட்ஸ்கிரீன் மற்றும் விளக்குகளை சுற்றி நிறைய விசயங்கள் நடந்ததாகவும், அது வெறுப்பூட்டியதாகவும், நாங்கள் வெளியே சென்றுவிட்டு பின்னர் வந்து விளையாடியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.. இந்தியாவிற்கு எதிரான தோல்வி இன்னும் என்னை வேட்டையாடுகிறது என்று தெரிவித்த அவர், பரவாயில்லை அது போகப்போக சரியாகிவிடும் என்றும், இந்த ஆஸ்திரேலியா அணி அடுத்த சுழற்சியில் எப்படி விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறேன் என்றும் பேசியுள்ளார்..

