9வது டி20 சதம்.. 135* ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா.. ஒரே இந்திய வீரர் என்ற கோலி சாதனை காலி!
ஹைதராபாத் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபிஷேக் சர்மா புயலாய் பேட்டை வீசினார். டிராவிஸ் ஹெட்டுடன் 97 ரன் தொடக்க கூட்டணிக்குப் பிறகு, 68 பந்தில் 10 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 135* ரன்கள் குவித்து அணியை 20 ஓவரில் 242 ரன்கள் என்ற மலைப்போன்ற ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.
அந்தவகையில் இன்று தொடங்கிய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
9வது டி20 சதம்.. கோலியின் சாதனை சமன்!
ஹைத்ராபாத் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஜோடியாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் முதல் விக்கெட்டுக்கே 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.
2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டிய டிராவிஸ் ஹெட் 37 ரன்னுக்கும், அடுத்துவந்த இஷான் கிஷன் 25 ரன்னுக்கும் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா 68 பந்தில் 135 ரன்கள் குவித்தார். கடைசியாக வந்த கிளாசன் 13 பந்தில் 37 ரன்கள் விளாச 20 ஓவரில் 242 ரன்கள் குவித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இன்றைய போட்டியில் சதமடித்த அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டில் 9வது டி20 சதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம் அதிக டி20 சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் அபிஷேக் சர்மா. அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்சர்களை கடந்து அசத்தினார் அபிஷேக் சர்மா.

