”100-150 சிக்சர்களை பயிற்சி செய்கிறேன்; தோனி தான் உத்வேகம்” - யார் இந்த 21 வயது முகுல் சௌத்ரி..?
ஐபிஎல் போட்டியில் 128/7 என்ற மோசமான நிலைமையிலிருந்து லக்னோவை அதிரடி வெற்றிக்குக் கொண்டுவந்த 21 வயது ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் முகுல் சௌத்ரி, கேகேஆர் அணிக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தினமும் 100-150 சிக்சர்கள் பயிற்சி செய்யும் அவர், தோனியின் ஃபினிஷிங் ஸ்டைலே தன் வாழ்க்கை உத்வேகமென கூறுகிறார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் 128/7 என மோசமான நிலைக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்றபிறகு, போட்டி மொக்கையாக இருக்கிறது என டிவி, மொபைலை ஆஃப் செய்துவிட்டு சென்ற ரசிகர்கள் ஒரு தரமான போட்டியை மிஸ்செய்திருப்பார்கள்.
ஸ்டார் வீரர்கள் அனைவரும் அவுட்டாகி வெளியேறிய பிறகும், அழுத்தத்தில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய 21 வயது முகுல் சௌத்ரி அதிசய ஃபினிஷிங்கை கொடுத்து எல்லோரையும் பிரம்மிப்பிற்குள் தள்ளினார்.
கேகேஆர் அணிக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், கடைசி 2 பந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் பறக்கவிட்டு லக்னோ அணியை வெற்றிக்குக் கொண்டுவந்தார்.
யார் இந்த முகுல் சௌத்ரி..?
21 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முகுல் சௌத்ரி, ராஜஸ்தானைச் சேர்ந்தவர். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமாக சையத் முஷ்டாக் அலி டிராபியில் ராஜஸ்தான் அணியின் சிறந்த ஃபினிசராக உருவெடுத்தது முகுல் தன்னுடைய அதிரடி ஹிட்டிங் திறமையால் கவனம் பெற்றார். அங்கு அவர் 5 இன்னிங்ஸ்களில் 198 ஸ்ட்ரைக்ரேட்டில் 173 ரன்கள் அடித்த பிறகு, ஐபிஎல் ஏலத்தில் 2.60 கோடி ரூபாய்க்கு சென்றார்.
குறிப்பிடத்தக்க வகையில் 2025-26 ஆம் ஆண்டில், 23 வயதுக்குட்பட்டோருக்கான CK நாயுடு கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய அவர் 102.83 சராசரியுடன் 617 ரன்களை குவித்து மிரட்டினார்.
100-150 சிக்சர்களை பயிற்சி செய்கிறேன்..
கொல்கத்தா அணிக்கு எதிரான அதிரடி வெற்றிக்கு பிறகு பேசிய முகுல் சௌத்ரி, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அவசரப்பட்டு ஆடுவேன், ஆனால் இப்போது நீண்ட நேரம் ஆடி, ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று வெல்லப் பழகியிருக்கிறேன். கடந்த இரண்டு போட்டிகளிலும்கூட, நான் நான்கு-ஐந்து பந்துகள் மட்டுமே ஆடினேன், ஆட்டமிழக்கவில்லை, ஆனால் என்னால் நன்றாக அடித்து ஆட முடியவில்லை.
இந்த போட்டிக்கு முன்னதாக பேருந்தில் பயணப்படும்போது என் பதட்டத்தை ரிஷப் பண்ட்டிடம் கூறினேன். நீ ஏன் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று இவ்வளவு யோசிக்கிறாய்? அப்படிச் செய்யாதே. நீ இதுவரை பயிற்சி செய்து வந்த செயல்முறையை மட்டும் களத்தில் செய் அதுவேபோதும். நீ அதிகமாக யோசித்தால், உனக்கு நீயே அதிக அழுத்தத்தைக் கொடுத்துக்கொள்வாய். பந்தை நீ பார்ப்பது போலவே பார்த்து அடி. உன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று பண்ட் கூறினார்.
பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ‘அவன் விரும்பினால், அடுத்த நான்கு மாதங்களில், நான் அவனை இந்தியாவின் மிகவும் அச்சுறுத்தலான 6-7வது பேட்ஸ்மேனாக மாற்றுவேன் என்று கூறினார். இவ்வளவு புகழ்பெற்ற ஒரு பயிற்சியாளர் உங்களைப் பற்றி அப்படிச் சொன்னால், அவர் நிச்சயமாக ஏதோ ஒன்றைக் கண்டிருக்கிறார். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தார்கள், அதனால் அதைத் திருப்பிச் செலுத்துவது என் கடமையாக இருந்தது. லாங்கர் தினமும் தனியாக எனக்கு 10-20 நிமிடங்கள் பயிற்சி அளிப்பார்.
தோனிதான் என் இன்ஸ்பிரேஷன்..
நான் தினமும் 100 முதல் 150 சிக்ஸர்கள் அடித்து பயிற்சி செய்கிறேன், தொடர்ந்து பயிற்சி செய்தால் அது மேம்படும். குறிப்பாக கடந்த 5-6 மாதங்களாக, நான் அதில் நிறைய உழைத்து வருகிறேன், அதனால் அது இப்போது மேம்பட்டுள்ளது.
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டும், அவர் அதை முடிக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அது சிக்ஸருக்கு அடிக்க ஒரு நல்ல பந்து, அதை உங்களால் அடிக்க முடிந்தால், பந்துவீச்சாளர் என்ன செய்வதென்று உண்மையிலேயே யோசிக்க வேண்டியிருக்கும். அதனால்தான் நான் அதைப் பயிற்சி செய்கிறேன்.
எம்.எஸ். தோனி எப்படி ஆட்டங்களை முடித்து வைப்பார் என்பதை நான் அதிகமாக பார்ப்பேன், நானும் அதே வரிசையில்தான் பேட் செய்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தார், நான் ஆட்டத்தை முடித்து அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்று முகில் சௌத்ரி பேசியுள்ளார்.

