ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்.. 21 வயசு பையன் சார்.. மரண காட்டு காட்டிட்டான்! LSG த்ரில் வெற்றி!
128/7 என மோசமான நிலைக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்றபிறகு, டிவியை, மொபைலை ஆஃப் செய்துவிட்டு சென்ற ரசிகர்கள் ஒரு தரமான போட்டியை மிஸ்செய்திருப்பார்கள். நம்ப முடியாத இடத்திலிருந்து 21 வயது முகுல் சௌத்ரி அதிசய ஃபினிஷ் கொடுத்து எல்லோரையும் பிரம்மிப்பிற்குள் தள்ளினார். ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்கள் அடித்து, கடைசி 2 பந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் பறக்கவிட்டு அணியை வெற்றிக்குக் கொண்டுவந்தார்.
2026 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் முதலிய அணிகள் அபாரமாக செயல்பட்டுவரும் நிலையில், நடப்பு 19வது சீசன் பரபரப்பை பற்றவைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற த்ரில்லர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடைசி 5 ஓவர் வரை ஒரு சாதாரண போட்டியாக இருந்த இந்த ஆட்டம் முகுல் சௌத்ரி என்ற 21 வயது பையனின் எண்ட்ரிக்கு பிறகு தலைகீழாக மாறியது.
தனது 3வது ஐபிஎல் போட்டியில் விளையாடினாலும் இறுதிவரை அழுத்தத்தை தைரியமாக கையாண்ட முகுல் சௌத்ரி, ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்களை பறக்கவிட்டு லக்னோ அணிக்கு ஒரு த்ரில் வெற்றியை தேடிக்கொடுத்தார்.
மின்னல் வேகத்தில் ஆட்டத்தை திருப்பிய முகுல்..
தொடர்ச்சியாக இரண்டு தோல்வி, ஒரு மழையால் தடை பட்டம் ஆட்டம் என 3 போட்டிகளுக்கு பிறகு வெற்றியே இல்லாமல் களம்கண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் முதல் 10 ஓவரில் கிட்டத்தட்ட 100 ரன்களை எட்டியிருந்தது. எப்படியும் 200 ரன்களுக்கு மேல் அடிப்பார்கள் என எதிர்ப்பார்த்த போது 19 பந்தில் 19 ரன்கள் அடித்த கேம்ரூன் க்ரீன், 7 பந்தில் 4 ரன்கள் அடித்த ரிங்கு சிங் என ஆட்டம் மந்தமாகவே சென்றது. கடைசியாக வந்து 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ரோவ்மன் பவல் 39 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது கேகேஆர் அணி.
182 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய லக்னோ அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஆனால் ஒரே ஓவரில் மார்க்ரம், மார்ஷ் இருவரையும் வெளியேற்றிய வைபவ் அரோரா ஆட்டத்தை தலைகீழாக திருப்பி போட்டார். தொடர்ந்து வந்த ஃபார்ம் அவுட் ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், சமத் என அனைவரும் சொற்ப ரன்களில் நடையைகட்ட, கடைசி பேட்டிங் ஜோடியாக இன்ஃபார்ம் ஆயுஸ் பதோனியும், 21 வயது முகுல் சௌத்ரியும் வெற்றிக்காக போராடினர்.
நல்ல ஃபார்மில் இருந்துவரும் ஆயுஷ் பதோனி தனியாளாக ஆட்டத்தை தோள்களில் சுமந்து 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட அரைசதமடித்து அசத்தினார். ஆனால் அரைசதம் அடித்த கையோடு 54 ரன்னில் பதோனியை வெளியேற்றிய கேகேஆர் அணி தரமான கம்பேக் கொடுத்தது. அடுத்து வந்த முகமது ஷமியும் காற்றில் பந்தை தூக்கியடித்து வெளியேற 128 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது லக்னோ.
அவ்வளவுதான் கொல்கத்தா வெல்லப்போகிறது என்ற ஆனந்தத்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள், கொல்கத்தா வீரர்கள் உட்பட அனைவரும் வெளிப்படுத்த, மின்னல் வேகத்தில் போட்டியை தலைகீழாக திருப்பினார் 21 வயது முகுல் சௌத்ரி. ராஜஸ்தானை சேர்ந்த இந்த சிறுவன் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் உட்பட 7 சிக்சர்களை நாலாபுறமும் சிதறடித்தார். கடைசி 2 பந்துக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தபோது 19.5வது பந்தில் சிக்சரை பறக்கவிட்ட முகுல் சௌத்ரி ஒரு நம்பமுடியாத வெற்றியை லக்னோவிற்கு தேடிக்கொடுத்தார். முதல் வெற்றியை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த கேகேஆர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரு புதிய ஃபினிசர், ஒரு புதிய ஸ்டார் நேற்றைய போட்டியில் உதயமானார், பெயர் முகுல் சௌத்ரி. இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

