
2025 ஐபிஎல் தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட இளம் திறமையான வீரர்களில் மிக முக்கியமானவர் வைபவ் சுர்யவன்ஷி. முதல் சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காதபோது திறமையாக செயல்படும் வீரர்கள், தங்களுடைய திறமையை நிரூபித்தபிறகு அதிகப்படியான எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாவார்கள்.
காரணம் புதியதாக களம்காணும் போது ஒரு வீரருக்கு எதிராக என்ன திட்டம் தீட்டவேண்டும் என்பது எதிரணிக்கு தெரியாது. ஆனால் நீங்கள் 2வது சீசனில் களமிறங்கும்போது உங்களுடைய பலவீனத்தை கண்டுபிடித்து எதிரணிகள் அதையே டார்கட் செய்யும்.
அந்தவகையில் 2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகாமக இருந்த நிலையில், முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 15 பந்தில் அரைசதமடித்து மிரட்டலாக தொடங்கியுள்ளார். மேலும் ராஜஸ்தானை ஒரு சாதாரண அணியாக பார்த்த வல்லுநர்களின் பார்வையை வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை மாற்றியுள்ளது.
உபி டி20 லீக் போட்டிகளில் மிகப்பெரிய் சிக்சர்களை அடிக்கும் சமீர் ரிஸ்வியின் திறமையை முதலில் கண்டறிந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். 2024 ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த அந்த அணி, ஒரு சுமாரான சீசனுக்கு பிறகு அவருடைய திறமை மீது நம்பிக்கை வைக்காமல் வெளியேற்றியது.
ஆனால் அங்கிருந்து ரிஸ்வியின் திறமை மீது நம்பிக்கை வைத்த டெல்லி கேபிடல்ஸ் அணி, தற்போது வைத்த நம்பிக்கைக்கான பலனை அனுபவிக்கிறது. 2025 ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் டெல்லிக்காக அரைசதத்துடன் முடித்த சமீர் ரிஸ்வி, 2026 ஐபிஎல் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் 70 ரன்கள், 90 ரன்கள் என அடித்து ஹாட்ரிக் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேலும் முதலிரண்டு போட்டிகளிலும் டெல்லி அணியின் ஆட்ட நாயகன் விருதை சமீர் ரிஸ்வியே பெற்றுள்ளார். பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக அவருடைய ஆட்டம் தனித்து நிற்கிறது.
மும்பையைச் சேர்ந்த திறமையான இளம் வீரர் ரகுவன்ஷி, 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். கேகேஆர் அணிக்கு சவாலான தொடக்கம் அமைந்திருந்தாலும், தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்த அங்ககிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக தொடங்கியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் தோளில் சுமந்துள்ள 21 வயது ரகுவன்ஷி, எதிர்காலத்தில் கேகேஆரின் சொத்தாக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டை வலுப்படுத்தும் அசட்டாக வந்து சேர்ந்துள்ளார் பிரின்ஸ் யாதவ். முதலிரண்டு போட்டிகளிலும் 3 ஓவரில் 20 ரன்கள் 2 விக்கெட், 4 ஓவரில் 34 ரன்கள் 2 விக்கெட் என ஒரு அசாதாரணமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
முகமது ஷமி அணிக்குத் திரும்பிய பிறகும், மயங்க் யாதவ் மற்றும் மொஹ்சின் கான் இருவரும் உடற்தகுதி பெற்ற பிறகும், அவர் எல்.எஸ்.ஜி அணியின் சிறந்த பவுலராக ஜொலிக்கிறார். அதிலும் சன்ரைசர்ஸ் அணியின் இன்ஃபார்ம் கேப்டன் இஷான் கிஷனின் ஸ்டம்பை தகர்த்த அவருடைய பந்து இப்போதும் கண்ணிலேயே நிற்கிறது.
ரஞ்சி டிராபியில் விதர்பா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ஆல்ரவுண்டரான ஹர்ஷ் துபே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவர், பவர்பிளே ஓவர்களில் கேப்டன் இஷான் கிஷனின் நம்பிக்கையான பவுலராக மாறியுள்ளார். அங்கு அவர் ரன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஃபின் ஆலன் விக்கெட் உட்பட பல முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
துபே தனது வழக்கமான லைன் மற்றும் லென்த் பந்துவீச்சை நம்பியிருந்தாலும், பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவதற்காக தனது வேகத்தை சாமர்த்தியமாகக் மாறிமாறி பந்துவீசுகிறார். ஒரு ரஞ்சி டிராபி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளரான இவர், தன்னுடைய பந்துவீச்சில் மட்டுமல்லாமல் கீழ் வரிசையில் பெரிய ஷாட்களை அடிக்கும் ஹேண்டி பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கிறார்.
எப்போதும் இந்தியாவிற்காக இளம் திறமையாளர்களை கண்டுபிடிக்கும் ஐபிஎல் தொடரானது 2026 ஐபிஎல் சீசனிலும் அற்புதமான திறமையாளர்களை கண்டறிந்துள்ளது.