277 சராசரி.. டி20 உலகக்கோப்பையை மிரட்டும் 22 வயது ஜிம்பாப்வே வீரர்! யார் இந்த பிரையன் பென்னட்?
22 வயது ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட், டி20 உலகக்கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை மிரளவைத்து, 5 இன்னிங்ஸ்களில் 277 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது மிரட்டலான பேட்டிங் திறமை, ஜஸ்பிரித் பும்ரா போன்ற தலைசிறந்த பவுலர்களை சவாலுக்கு உட்படுத்தியது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பை போட்டி சுமார் 27000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சூழ நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி நிர்ணயித்த 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய 22 வயது இளம் வீரர் பிரையன் பென்னட் உலகின் தலைசிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா வீசியபந்தை லாங்-ஆன் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டு மிரளவைத்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஒருநிமிடம் அமைதிக்கு சென்று, தங்களின் மாஸ்டர் கிளாஸ் பவுலரை இப்படி யாரும் அடித்ததில்லையே என ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பும்ராவிற்கு எதிராக அழுத்தமா? என்ன அழுத்தம்? என்பது போல மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய 22 வயது பிரையன் பென்னெட் நடப்பு உலகக்கோப்பையில் 5 இன்னிங்சில் 3வது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய அவர், 97 ரன்களுடன் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 64* ரன்கள், இலங்கைக்கு எதிராக 63* ரன்கள் என 3 உலகக்கோப்பை வென்ற அணிகளையும் மிரளவைத்தார் பிரையன் பென்னட். இதன்மூலம் ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் எதிர்காலம் சிறந்த வீரரின் கையில் இருப்பது உறுதியாகியுள்ளது.
யார் இந்த பிரையன் பென்னட்..?
2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து ஜிம்பாப்வே அணி சூப்ப 8 சுற்றோடு வெளியேறியிருந்தாலும், நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 277 ரன்கள் மற்றும் 277 சராசரியுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார் பிரையன் பென்னட். முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தானின் சாஹிப்சாதா பர்ஹான் 6 ரன்கள் மட்டுமே கூடுதலாக அடித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டுமில்லாமல் கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் பிரையன் பென்னட்டின் ஆண்டாகவே இருந்துள்ளது. 2025ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்த பிரையன் பென்னட், நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், கட் அட்கின்ஸன், ஜோஷ் டங், சாம் குக் மற்றும் ஷோயப் பஷீர் முதலிய பந்துவீச்சு மோதலுக்கு எதிராக 139 ரன்கள் குவித்து அசத்தினார்.
தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் 61 ரன்களும், இலங்கைக்கு எதிரன டி20 போட்டியில் 81 ரன்களும், நமீபியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 94 ரன்களும் அடித்து மிரட்டினார்.
மேலும் 2026 டி20 உலகக்கோப்பைக்கான ஆப்பிரிக்கா பிராந்தியம் தகுதிச்சுற்று போட்டிகளில் ஒரு சர்வதேச டி20 சதம், 3 அரைசதங்களும் அடித்து ஜிம்பாப்வே அணி டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற மூல காரணமாக விளங்கினார்.
அதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 47 ரன்கள், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக தலா 49 ரன்களும் அடித்து சிறந்த ஃபார்ம் உடன் உலகக்கோப்பையில் காலடிவைத்தார்.
அவருடைய ஃபார்மை 2026 டி20 உலகக்கோப்பையிலும் வெளிப்படுத்தியிருக்கும் 22 வயது பிரையன் பென்னட், 5 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே அவுட்டாகி 3 அரைசதங்களுடன் 277 சராசரியில் 277 ரன்கள் குவித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். சிறந்த திறமையாக விளங்கும் பிரையன் பென்னட் ஜிம்பாப்வே கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்வார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் புகழ்ந்துவருகின்றனர்.

