16 பந்துகளில் 20 ரன் தேவை; ஆனாலும் தோனி செய்த மேஜிக்! வைரலாகும் Champions Trophy வின்னிங் மொமண்ட்ஸ்!

உலகக்கோப்பையை, இந்திய அணி இழந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்திய அணி
இந்திய அணிட்வுட்டர்

இந்திய அணி, 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் உலகக்கோப்பையை மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் இழந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்த வேதனையில் இருந்து வீரர்களும், ரசிகர்களும் மீளவில்லை. ஆனால், இணையதளங்களோ இந்திய அணியின் பழைய வெற்றிப் போட்டிகளை எடுத்து வைரலாக்கி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நடப்பு உலகக்கோப்பையில் இரண்டாது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி ஒருகட்டத்தில் 6.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்களை எடுத்திருந்தது. இதனால், அப்போதுகூட இந்திய அணியின் கை ஓங்கியே இருந்தது. ஆனால், அதற்குப் பின் நின்ற ஹெட் மற்றும் லபுசேனனைப் பிரிக்க முடியாததால், வெற்றி ஆஸ்திரேலிய பக்கம் சென்றது. இதற்கு மாற்றுப் பந்துவீச்சாளர் ஒருவர் இல்லாததும், மறுபக்கம் பீல்டிங்கில் சொதப்பியதும் காரணம். குறிப்பாக ரவீந்திரா ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ்வின் சுழற்பந்துவீச்சின்போது ஸ்லிப்பில் பீல்டர் நிறுத்தப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் வெகு எளிதாகப் பந்துகளைப் பவுண்டரி எல்லைக்கு விரட்டினர். அதுபோல், முகம்மது சிராஜின் பந்துவீச்சும் எடுபடவில்லை. இதனால், இந்திய அணி கவலைகொள்ளச் செய்ததுடன், கோப்பையையும் ஆஸ்திரேலியாவிடம் தாரைவார்த்தது.

இதையும் படிக்க: கோலியின் 48-வது சதம் சாத்தியமானது எப்படி.. இந்திய தோல்விக்கு நடுவரைக் காரணம் கூறுவது நியாயமா?

ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் (மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன) 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி, 46 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், 5வது விக்கெட்டிற்கு ஜோடிசேர்ந்த மோர்கன் மற்றும் பொபாரா கூட்டணி பொறுப்பாக விளையாடி 64 ரன்களைச் சேர்த்தது. கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது, இங்கிலாந்தின் வெற்றி உறுதி என்றே எல்லோரும் பேசப்பட்ட நிலையில், அந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தார், தோனி. 18வது ஓவரை வீசிய இஷாந்த் ஷர்மா முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. அடுத்த பந்தில் ஒரு சிக்ஸரையும், அதற்கடுத்த பந்துகளில் 2 வைடுகளையும் தந்தார். பின்னர், 16 பந்துகளில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர் சரியாக பந்து வீசி மோர்கன் மற்றும் போபாரா விக்கெட்டுகளை கைப்பற்றினார் இஷாந்த்.

இதையும் படிக்க: இந்தியாவின் தோல்விக்கு அகமதாபாத் மைதானமும் காரணமா? - பிட்ச் முதலில் மிகவும் மந்தமாக இருந்தது எப்படி?

இதையடுத்து, கடைசி இரண்டு ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அதில் ஜடேஜா 4 ரன்களை மட்டுமே வழங்கி, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து, கடைசி ஓவரில் அஸ்வின் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. அதன்மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இறுதிவரை எல்லாப் போட்டிகளிலும் நம்பிக்கையை இழக்காது, அத்தகைய நேரத்தில் என்ன அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டுமோ, அதைச் செய்து இந்தியாவுக்கு வெற்றிக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த ’தல’ தோனியின் மகத்தான போட்டிகளைத்தான் இணையதளங்கள் இன்று வைரலாக்கி வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. அதாவது, குறைந்த ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய சூழலில், இங்கிலாந்து அணிக்கு 6 விக்கெட்கள் கையில் இருந்தும் அந்த 3 ஓவர்களில் மேஜிக் செய்து கோப்பையைப் பெற்றுக் கொடுத்ததாலேயே தோனி, இன்றும் இந்திய ரசிகர்களால் புகழப்படுகிறார்.

இதையும் படிக்க: ”2 ஓவர்களில் ஆட்டத்தையே மாத்திடுவாங்க”-ஆஸி. குறித்து இந்திய அணிக்கு முன்பே எச்சரித்த பாக். வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com