சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் மீது நம்பிக்கை இருக்கு - இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்..!
தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் இருவரும் சோபிக்காத நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளரான ரியான் டென் டூசார்ட், "கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் மீது நம்பிக்கை இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள்" என கருத்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இக்கட்டான நிலையில் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ்!
கோலி மற்றும் ரோகித்துக்கு அடுத்தபடியாக மூன்று பார்மட்களிலும் கேப்டனாக பார்க்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கழுத்தில் காயமேற்பட்டது. அதன் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீண்ட அவர் டி20 தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. முதல் போட்டியில் 4 ரன்களில் அவுட்டாகி தடுமாறிய நிலையில் அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதோடு, இந்த ஆண்டு அவர் விளையாடிய 10க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அடுத்த ஆண்டு, டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் இவரது பேட்டிங் பல்வேறு கேள்விகளை முன்வைப்பதாக உள்ளது.
அடுத்தது சூர்யகுமார் யாதவ். இவரை மிஸ்டர் 360 டிகிரி என செல்லமாக அழைத்த ரசிகர்கள் இன்று அப்படி சொல்லிக்கொள்வதில்லை. காரணம் இவரின் பேட்டிங். 2025-ஆம் ஆண்டில் இவர் விளையாடிய 10க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் அணிக்குத் தேவையான முக்கியமான நேரங்களில் சொதப்பி வருகிறார். நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் அவரின் ஆட்டம் சிறப்பாக இல்லை. டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக 8 டி20 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் இவரின் பேட்டிங் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
இந்திய உதவி பயிற்சியாளரின் கருத்து
கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜபிஎல் போன்ற தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். ஆனால், 2025 சர்வதேச டி20 போட்டிகளில் இருவரும் சரியாக ஆடவில்லை. இருவரும் கொடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை; எனவே, மாற்று வீரர்களான சாம்சன்,கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றவர்களை தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளரான ரியான் டென் டூசார்ட் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், "சில நேரங்களில் இது போன்ற நிகழ்வு ஏற்படுவது உண்டு. இருவரும் திறமையான வீரர்கள். மேலும் அடுத்து வரும் போட்டிகளில் அவர்களின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார். இந்த கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா...?
தொடக்க ஆட்டக்காரன சஞ்சு சாம்சனின் ஆட்டம் நடப்பாண்டில் சிறப்பாக இருந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு விளையாடிய டி20 போட்டிகளில் மூன்று சதம், ஒரு அரைசதம் அடித்திருக்கும் இவரின் ஸ்டைரைக் ரேட் 178.76 ஆக இருக்கிறது. ஆனால், நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆடும் லெவனில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு பதிலாக இவரை தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இடதுகை பேட்ஸ்மனாக இருக்கும் ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடிய இவர் ஒரு சில போட்டிகளில் சொதப்பியதால் அணியில் இருந்து விடுவிக்கபட்டார். ஆனால் சுப்மன் கில்-க்கு சரியாக ஆடாமல் போனலும் கூட தொடர்ந்து 10-க்கும் மேற்ப்பட்ட வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்று ரசிகர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.
