“அவன் வம்பிழுத்ததுக்கு என் விக்கெட்டை ஏன்பா எடுத்த”.. வார்த்தைவிட்ட கொன்ஸ்டாஸ்.. ஆக்ரோஷமான பும்ரா!
பார்டர் கவாஸ்கர் தொடரில் சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாளின் கடைசி ஓவரில் தரமான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்தியா, அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது. கே.எல்.ராகுல் 4 ரன்களிலும், ஜெய்ஷ்வால் 10 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ரிஷப் பந்த் மட்டும் நிதானமாக விளையாடி 40 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஜடேஜா 95 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் எடுத்து ரிஷப்-க்கு சற்று நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார்.
முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து நிதிஷ் குமார் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் அடித்தார். இதையெல்லாம் தாண்டி கடைசி நேரத்தில் கேப்டன் பும்ரா சற்றே அதிரடி காட்டியதால் தான் இந்திய அணி 185 ரன்கள் வரை சென்றது. அதாவது பும்ரா 17 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 22 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலந்து 4 விக்கெட்கள், ஸ்டார்க் 3 விக்கெட்கள், கம்மின்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதலாம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் பும்ராவுக்கும் ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ்-க்கும் இடையே மோதல் போக்கு நிலவிய வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் அதாவது ஆஸ்திரேலியா விளையாடிய மூன்றாவது ஓவரை பும்ரா வீசினார். அப்போது, பும்ரா பந்துவீச தயாராக இருந்தபோதும் கவாஜா தயாராக சற்றே கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். சிறித்து நேரம் காத்திருந்து பின்னர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார் பும்ரா. தன்னுடைய ஸ்டலில் ஏதோ சைகை செய்தார்.
ஆனால், இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் நான் ஸ்ரைக்கரில் நின்றிருந்த சாம் கொன்ஸ்டாஸ் தானாக நுழைந்து வம்பிழுத்தார். பும்ராவை நோக்கி ஏதோ வார்த்தைகளை கூறியிருக்கிறார். இதனால், பும்ரா டென்ஷன் ஆகியிருக்கிறார். அவர நோக்கி ஆக்ரோஷமாக சென்றிருக்கிறார். அவரும் பும்ராவை நோக்கி ஆக்ரோஷமாக சென்றிருக்கிறார். அப்போது, களத்தில் இருந்த நடுவர் இருவரையும் விலக்கி விட்டிருக்கிறார். இதனால் சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே, கடந்த போட்டியில் தான் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியினை கொன்ஸ்டாஸ் விளையாடினார். முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து பலரையும் மிரள வைத்தார். குறிப்பாக பும்ரா பந்துவீச்சிலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவரது விக்கெட்டை எளிதில் சாய்த்தார் பும்ரா. தன்னுடைய ஈகோவை சீண்டிப் பார்த்ததற்கு தக்க பதிலடி கொடுத்தார். களத்திலும் கொன்ஸ்டாஸ் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. இந்நிலையில், நாளை நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கொன்ஸ்டாஸ் விக்கெட்டை வீழ்த்த பும்ரா முழு பலத்தை முயற்சிப்பார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பும் உயிர்ப்புடன் இருக்கும்