5ஆவது டெஸ்ட் கிரிக்கெட்.. பும்ரா தலைமையில் இந்திய அணி; சாதனை செய்ய தயாராகும் ஸ்மித்!
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது. தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், சமன் செய்யும் வேட்கையுடன் பும்ரா தலைமையில் இந்திய அணியும் இந்தப்போட்டியில் களமிறங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா. போட்டிக்கு போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கான சிட்னி அரங்கம் தயார் நிலையில் உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மற்றுமொரு மாற்றத்தை செய்துள்ளது. ஆல் ரவுண்டரான பியு வெப்ஸ்டர், இந்தப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் ஷர்மா விளையாடாத நிலையில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்குகிறார். இதேபோல் ஆகாஷ்- க்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மத்திய வரிசையில் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சிட்னி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க் துருப்புச்சீட்டாக இருப்பார் எனத் தெரிகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கிறார்.
இதேபோல் இந்தப்போட்டியில் 38 ரன்களை எடுத்தால் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் பத்தாயிரம் ரன்கள் எடுத்த சாதனையை படைப்பார். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றுவிடும். இந்திய அணி வெற்றி பெற்றால் அந்த வாய்ப்பை தக்க வைக்கும். ஆனால் சிட்னி ஆடுகளத்தில் இந்திய அணியின் வரலாறு ஒன்றும் சிறப்பாக இல்லை. அங்கு நடந்துள்ள 13 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.