ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? காரணம் என்ன?

இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் வரலாறு என்ன என்பதை பார்க்கலாம்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகைfreepik

ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் மகத்தான பண்டிகையான ஓணம், கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று!

கேரளாவில் இது இன்றளவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் கொண்டாடப்படும் அன்று, மக்கள் தங்களது இல்லங்களில் கடவுளை (மகாபலியை) வரவேற்கும் விதமாக வாசலை பூக்களால் அலங்கரித்து, புத்தாடை அணிந்துக்கொண்டு, கோவிலுக்குச் சென்றுவந்து, இனிப்புகளை அண்டை வீட்டாருடன் பகிர்ந்துக்கொண்டு மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த ஓணம் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதற்கு காரணம் ஒரு அரக்கன் என்றால் நம்பமுடிகிறதா? என்ன அரக்கனா என்கிறீர்களா? ஆம்! அரக்கன்தான். அவர்தான் மகாபலி சக்ரவர்த்தி. இவரின் கதை என்ன என்பதை பார்க்கலாம்.

புராணத்தில், பிரகலாதன் கதை என்ன என்பதை நாம் அறிவோம். பிரகலாதன் ஒரு அரக்க வம்சத்தில் பிறந்தவன் என்றாலும் விஷ்ணு மேல் பக்தி கொண்ட காரணத்தால் நரசிம்மரிடம் ஆசி பெற்றவர்.

ஓணம் பண்டிகை
‘எங்கும் நிறைந்துள்ளவர் அவர்; கூப்பிட்டதும் வந்துவிடுவார்’-பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்ம மூர்த்தி!

இவரது பேரன் தான் மகாபலி சக்ரவர்த்தி. இவர் மிகச்சிறப்பாக நாட்டை ஆட்சி செய்து வந்தார். இருப்பினும் இவரது ஆட்சியில் தேவர்கள் ஒடுக்கப்பட்டனர். ஆகையால் தேவர்கள் பகவான் நாராயணணிடம் தங்களை மகாபலியிடமிருந்து காப்பாற்ற வேண்டி தவம் இருந்தனர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற பகவான், வாமனனாக அவதரித்திருந்தார் என்று புராணங்கள் கூறுகின்றது.

மகாபலியின் குரு சுக்ராச்சாரியார். ஒருமுறை குருவின் ஆசிபெற்று நாட்டில் ஒரு ராஜசூயை யாகம் ஒன்றை நடத்தினார் மகாபலி. அந்த யாகம் நடக்கும் சமயத்தில், யார் எதைக் கேட்டாலும் தானம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதனால் நாட்டில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டியதை அரசரின் மூலம் தானமாக பெற்று சென்றனர். யாகம் நிறைவு செய்யும் நேரத்தில் சிறு பாலகனான வாமனர், அரசரிடம் தானம் பெற நினைத்து வந்தார். மகாபலிக்கு பாலகனான வாமனரைப் பார்த்ததும் அவரை அறியாமலேயே மனம் மகிழ்ந்தது. தானே தனது இருக்கையிலிருந்து இறங்கி வாமனனிடத்தில் வந்து, “குழந்தாய்... யாகம் முடியும் தருவாயில் யாசகம் கேட்டு வந்து இருக்கிறாய். நீ வேண்டுவதை கேள். நான் தருகிறேன்” என்றார்.

ஆனால் மகாபலியின் குருவான சுக்ராச்சாரியாருக்கு வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்திருந்தது. ஆகவே, மகாபலியை தடுத்தார். “அரசரே... யாகம் முடியும் தருவாயில் உள்ளது. ஆகவே, அதை நிறுத்தவேண்டாம். இச்சிறு பாலகனை கவனத்தில் கொள்ள வேண்டாம்” என்று கூறினார். ஆனால், மகாபலியோ குரு கூறியதை காதில் கொள்ளவில்லை.

வாமனனும், “அரசே... எனக்கு வெறும் மூன்றடி நிலம் வேண்டும்” என்று கூறினார். இதைக் கேட்டதும் மகாபலி புன்னகைத்தார். வெறும் மூன்றடி நிலமா? அதுவும் நீ பாலகன்.. உனது பாதமோ மிக சிறியது, இதைக்கொண்டு மூன்றடி நிலம் கேட்கிறாயே? இது போதுமா?” என்று கேட்டார்.

அக்காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது தானம் கொடுப்பவர், தானம் பெருபவருக்கு தனது கையால் நீரை தாரைவார்த்து கொடுத்தால் ‘தானம் கொடுக்கப்பட்டது’ என்று உறுதியளிக்கப்படும். தானம் பெருபவர் அப்பொருளை தனதாக்கிக்கொண்டு விடலாம். இந்த வழக்கத்தின்படி வாமனன் கேட்ட மூன்றடி நிலத்தை தாரைவார்த்துக் கொடுப்பதற்காக கமண்டலத்தில் உள்ள நீரை மகாபலி கொடுக்கப்போனார்.

அப்போது சுக்கிராச்சாரியார், தனது கண்ணை ஒரு வண்டாக்கி கமண்டலத்தின் வாயிலை அடைத்துவிட்டாராம். இதனால் நீர் கமண்டலத்தை விட்டு வெளியே வரவில்லை. இதை அறிந்துக்கொண்ட வாமனன், தன்னிடம் இருந்த தர்ப்பை புல்லைக்கொண்டு கமண்டலத்திலிருந்த வண்டை குத்தினார். இதில் சுக்ராசாரியாருக்கு ஒரு கண் குருடானது. தன் தவறை உணர்ந்துக் கொண்ட குரு சுக்ராசாரியார் அமைதியானார்.

ஓணம் பண்டிகை
மாவலி மன்னனை வரவேற்கும் ஓணம் பண்டிகை: அறுசுவை விருந்து, அத்தப் பூ கோலம் - ஓர் தொகுப்பு

பிறகு, கமண்டலத்திலிருந்த நீரைக்கொண்டு வாமனன் கேட்ட மூன்றடி நிலத்தை தாரை வார்த்துவிட்டார் மகாபலி. அடுத்த நொடி பாலகனான வாமனன் விஷ்வரூபமாக வளர்ந்தார். தனது ஒரு காலால் உலகத்தையும் மறு காலால் மேலோகத்தையும் அளந்தார். இதைக்கண்ட மகாபலி வந்திருப்பது நாராயணன்தான் என்பதை அறிந்துக்கொண்டு அவரை வணங்கினான்.

வாமனனும், “மகாபலி, நீ தானமாக கொடுத்த மூன்றடிக்கு நிலம் எங்கே...?” என்று கேட்கவும், மகாபலி, மூன்றாவது அடிக்கு தன்னையே அவரிடம் ஒப்படைத்தார். பிறகு மகாபலிமேல் கருணைக்கொண்ட வாமனன், “உன்னை பாதாள உலகிற்கு அரசனாக்குகிறேன். அங்கு உனது அரசாட்சியை வைத்துக்கொள்” என்று கூறினார்.

இதைக்கண்டு மகிழ்ந்த மகாபலி வாமனனாக வந்த விஷ்ணுபகவானிடத்தில் ஒரு வரத்தைக் கேட்டார். “நாராயணா... என்னதான் இருந்தாலும் இங்குள்ள அனைவரும் எனது குடிமக்கள். நான் இருந்தவரை இவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் காத்து வந்தேன். ஆகவே... இவர்களின் நலன்கருதி, வருடத்தில் ஒரு நாள் நான் பூலோகம் வந்து இவர்கள் மகிழ்சியுடன் இருப்பதை பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார். வாமனனும் வரத்தை வழங்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது.

அதன்படி பாதாள உலகை ஆட்சி செய்து வரும் மகாபலி அரசன், ஓணம் அன்று பூலோகத்திற்கு வந்து மக்களின் நலனை பார்த்துச் செல்வதாக ஐதீகம். இந்நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com