‘எங்கும் நிறைந்துள்ளவர் அவர்; கூப்பிட்டதும் வந்துவிடுவார்’-பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்ம மூர்த்தி!

அரக்கர்கள் அனைவரும், "ஓம் இரண்யாயை நமஹ" என்று சொல்லும் வேளையில் பிரகலாதன் மட்டும் "ஓம் நமோ நாராயணா" என்று சொல்லி வந்தான்!
நரசிம்ம அவதாரம்
நரசிம்ம அவதாரம்Representational Image

இன்று நரசிம்ம ஜெயந்தி கடைபிடிக்கப்படுகிறது. மகா விஷ்ணுவின் 4வது அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மிகவும் சிறப்புக்குரிய அவதாரமாக இதுபார்க்கப்படும் நிலையில், இந்த அவதாரத்தில் நரசிம்மர் கேட்பதை விட அதிகமாகவே அள்ளிக் கொடுப்பவராகவும் அதுவும் கேட்டமாத்திரத்திலேயே கொடுப்பவராகவும் அறியப்படுகிறார்.

சரி, நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுவதன் பின்னணி என்ன?

நரசிம்மர், பிரகலாதனுக்காக அந்திப்பொழுதில் அவதரித்த தினம், வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி ஆகும். அதனால் தான் இந்த நாள் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நரசிம்மர்
நரசிம்மர்

யார் இந்த பிரகலாதன்? புராணங்கள் சொல்லும் கதை:

இரண்யகசிபு என்ற அரக்கன், விஷ்ணு பகவானுக்கு ஜென்ம விரோதி. ஒருமுறை அவன் பிரம்மாவிடத்தில் “மனிதனாலோ மிருகத்தினாலோ வீட்டின் உள்ளேயோ வெளிலேயோ எந்த ஒரு ஆயுதத்தாலும் பகல், இரவுகளில் எனக்கு இறப்பு என்பது வரக்கூடாது” என்றொரு வரத்தை பெற்றிருந்தான். அதனால் அவனது அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

எதற்கும் ஒரு முடிவு வேண்டும் அல்லவா? இதற்கும் முடிவு வந்தது. இவனது முடிவை இவன் குழந்தையின் மூலமே நிறைவேற்ற எண்ணிய பகவான், அவனுக்கு ஒரு ஆண் குழந்தையை தந்தார். அக்குழந்தைதான் பிரகலாதன். இக்குழந்தை பிறந்தது முதல் நாராயணன் மேல் அளவு கடந்த பக்தியை கொண்டிருந்தான்.

அரக்கர்கள் அனைவரும், "ஓம் இரண்யாயை நமஹ" என்று சொல்லும் வேளையில் பிரகலாதன் மட்டும் "ஓம் நமோ நாராயணா" என்று சொல்லி வந்தது இரண்யகசிபுக்கு பிடிக்கவில்லை. மகனை கண்டித்தும் பார்த்தான், தண்டித்தும் பார்த்தான். பிரகலாதன் மாறுவதைபோல் தெரியவில்லை. தவிரவும், பிரகலாதன் தனது நண்பர்களிடமும் நாராயணன் பற்றி எடுத்துக் கூறி அவர்களையும் "ஓம் நமோ நாராயணா" என்னும் திருநாமத்தை உச்சரிக்க சொல்லி தந்தான்.

இது இரண்யகசிபுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. தனது மகனால் தனக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்த இரண்யகசிபு, சேவகர்களிடம் பிரகலாதனை கொலை செய்துவிடும்படி கட்டளை இட்டான்.
நரசிம்மர்
நரசிம்மர்

அரசனின் கட்டளையை ஏற்ற சேவகர்களும் பிரகலாதனை மலையிலிருந்து கீழே தள்ளியும், கடலுக்குள் வீசியும், யானையால் தலையை பிடறவைத்தும் பல்வேறு வழிகளில் அவனது உயிரை பறிக்க முயன்றனர். ஆனால் ஒவ்வொரு ஆபத்தின் போதும் பிரகலாதனை நாராயணன் காப்பாற்றினார்.

இது இரண்யகசிபுக்கு கடும்கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில் இரண்யகசிபு பிரகலாதனை அழைத்து, “ஒவ்வொரு முறையும் உன்னை நாராயணன் காப்பாற்றுவதாக கூறுகிறாயே.... இப்பொழுது நானே என் கையால் உன் உயிரை எடுக்கப்போகிறேன். இப்பொழுது உன் நாராயணன் இங்கு வந்து உன்னை காப்பானா?” என்றான்.

உடனே பிரகலாதன் "ஆம் தந்தையே... அவசியம் வருவார். அவர் எங்கும் நிறைந்துள்ளவர். ஆகவே கூப்பிட்டதும் வந்து விடுவார்" என்றான்.

நரசிம்ம அவதாரம் - இரண்யகசிபு
நரசிம்ம அவதாரம் - இரண்யகசிபு

"அப்படி என்றால் இத்தூணில் கூட உன் நாராயணன் இருக்கிறாரா? இருந்தால் அவரை வரச் சொல்" என்று சொல்லி முடிக்கும் முன்பாக, தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் அவதரித்தார். சித்திரை மாத வளர்பிறை சுவாதி நட்சத்திர திருநாள்தான் அவர் அவதரித்த வேளை. இன்றும் அதே திருநாள்தான்.

தூணை பிளந்து வெளியே வந்த பகவான், நரசிம்மமூர்த்தியாக காட்சி அளித்தார்.

பின் பகவான் இரண்யகசிபை மடியில் கிடத்தி வதம் செய்தார் என்ற புராணங்கள் சொல்கின்றன.

நரசிம்ம அவதாரம் - இரண்யகசிபு
நரசிம்ம அவதாரம் - இரண்யகசிபு

நரசிம்மரின் 3 அடையாளங்கள்:

இந்த நரசிம்மர் உக்கிர நரசிம்மர், லெக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் என்று மூன்று விதமாக அடையாளப்படுத்தபடுகிறார்.

ஐதீகம்:

* உக்கிர நரசிம்மரை வணங்கினால் எதிரிகள், சத்ருக்களின் தொல்லை நீங்கும். வேலை வாய்ப்பு, வேலை உயர்வு போன்றவற்றிற்கு இவரை வணங்கலாம். இந்த நரசிம்மருக்கு ஒரு விஷேஷ குணம் உண்டு. பக்தர்கள் அழைத்ததும் உடனடியாக வரக்கூடியவர்! உடனடியாக பலனும் தரக்கூடியவர்

* செல்வத்திற்கு லெஷ்மி நரசிம்மரை வணங்கலாம்.

* ஞானம், அறிவு பெற யோகநரசிம்மரை வணங்கலாம்.

நரசிம்மருக்கு பானகம் மிகவும் விஷேஷமானது. ஆகையால் பானகத்தை நைவேத்யமாக படைக்கலாம்.

லெக்‌ஷ்மி நரசிம்மர்
லெக்‌ஷ்மி நரசிம்மர்

நரசிம்மர் காயத்ரி மந்திரம் :

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்

இந்த நரசிம்ம ஜெயந்தியில் நரசிம்மரை வணங்கி, அவரின் அருளை பெறுவோமாக!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com