மாவலி மன்னனை வரவேற்கும் ஓணம் பண்டிகை: அறுசுவை விருந்து, அத்தப் பூ கோலம் - ஓர் தொகுப்பு

மாவலி மன்னனை வரவேற்கும் ஓணம் பண்டிகை: அறுசுவை விருந்து, அத்தப் பூ கோலம் - ஓர் தொகுப்பு
மாவலி மன்னனை வரவேற்கும் ஓணம் பண்டிகை: அறுசுவை விருந்து, அத்தப் பூ கோலம் - ஓர் தொகுப்பு

உலகம் முழுவதும் வாழும் மலையாளம் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவில் முக்கிய இடம் பிடிப்பது வண்ண வண்ண பூக்களை கொண்டு உருவாக்கப்படும் அத்தப் பூ கோலங்கள் ! பலவகை பதார்த்தங்களுடன் தயார் செய்யப்படும் ஓணம் சந்தியா உணவு விருந்து ! இதன் பின்னணி குறித்து கேரள மாநிலத்தில் அந்த மக்களிடம் இருந்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. குறிப்பாக வண்ண வண்ண பூக்களை கொண்டு உருவாக்கப்படும் அத்தப்பூ கோலம் மற்றும் ஓணம் சந்தியா என்ற பெயரில் வகை வகையான பதார்த்தங்களுடன் தயாரிக்கப்படும் உணவு அறுசுவை விருந்து.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் பத்து நாட்களும் கேரள மாநிலத்தில் வீடுகளில் தொடங்கி கடைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும், வகைவகையான அழகழகான பூக்களை கொண்டு உருவான அத்தப்பூ கோலங்களால் அழகின் அடையாளங்களாக மாறி நிற்கும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளத்து வீடுகளில் அழகுற செய்யப்படும் அத்தப்பூ கோலம் மற்றும் சந்தியா விருந்து குறித்து திருவனந்தபுரத்தில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழும் வீடு ஒன்றில் இருந்து பெண்மணி உஷா கூறும்போது, “அத்தம் முதல் திருவோணம் வரை 10 நாள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் முதல் நாள் தும்பை பூ, இரண்டாவது நாள் துளசி, மூன்றாவது நாள் செம்பருத்தி பூ என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் பத்து நாட்களுக்கும் பூக்களை அழகுபடுத்துவோம். பத்தாம் நாள் திருவோணத்தன்று ஓணம் சந்தியா உணவு தயாரித்து அதனுடன் அடை அப்பம் தயார் செய்வோம். 10 நாட்களும் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழும் அனிதா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் உருவாக்கும் அத்தப்பூ கோலம் குறித்து கூறும்போது, “மக்களைக் காண வரும் மாவலி மன்னரை வரவேற்கும் விதமாக அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை உள்ள பத்து நாட்கள் ஓணம் திருவிழாவை கொண்டாடுகிறோம். முதல் நாளில் ஒரு பூவை கொண்டு ஒரு சிறு வட்டம் செய்வோம். அடுத்த நாள் இரண்டு வகையான வண்ண பூக்களை கொண்டு அடுத்த வட்டம் செய்வோம். மறுநாள் மூன்றாவது என பத்து நாட்களும் நாளுக்கு ஒரு வண்ணம் கொண்ட பூக்களை ஒன்று சேர்த்து அடுத்த அடுத்ததாக வட்ட வடிவில் பூக்களை சேர்த்து அத்தப்பூ களம் உருவாக்கப்படும். பத்தாவது நாள் 10 வண்ண பூக்களை கொண்டு மிகப்பெரிய அளவில் அத்தப்பூ கோலம் உருவாக்குவோம்.

ஓணம் பண்டிகைக்கு நான்கு நாட்கள் முன்பிருந்து ஒவ்வொரு நாளும் வீட்டில் தயாரிக்கப்படும் மதிய உணவான ஓணம் சந்தியா என்பது விருந்துகளில் முக்கியமானது. கேரளாவின் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்ப ஓணம் சந்தியா விருந்து மாறுபடும். திருச்சூர் பகுதிகளில் ஓணம் சந்தியாவில் இஞ்சிபுளி, குறுக்கு காளான் இவை பிரதானமாக தயார் செய்வார்கள். பாலக்காடு பகுதியில் மாம்பழ புளிச்சேரி தயார் செய்வார்கள். முன்பு திருவனந்தபுரம் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கூட்டுக்கறி, சாம்பார், பருப்பு, ரசம், புளிச்சேரி, பச்சடி, கிச்சடி, பிரதமை என்றால் மலையாளத்தில் பாயாசம். அதிலும் அடைபாயாசம், பருப்புபாயாசம், பாயாசம் தயார் செய்வது வழக்கம். இதில் அடை பாயாசம் முக்கிய பங்கு வகிக்கும். பருப்புபப்படம் மற்றும் பலவிதமான ஊறுகாயும் தயார் செய்யப்படும். அதிகபட்ச சுவை கொண்ட சைவ உணவு தான் இந்த விருந்தின் பிரதானம்” என்றார்.

திருவனந்தபுரத்தில் குடியிருப்பில் வாழும் ஸ்ரீகாந்த் கூறும்போது, “ஓணம் பண்டிகை ஆரம்பிக்கும் நாள் தொடங்கி 10 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரும்பாலான வணிக வளாகங்கள் விடுமுறை அளிக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக மாநிலமே இந்த திருவிழாவை கொண்டாடுகிறது. வீடுகளில் அனைவருக்கும் புத்தாடைகள் எடுக்கப்படும். விதவிதமாக பலகாரங்கள் பல்சுவை விருந்து உடன் ஓணம் சந்தியா உறவினர்களுடன் விருந்து. இந்த பண்டிகை கொண்டாட உலகில் எங்கிருந்தாலும் கேரளாவில் தங்கள் வாழும் இல்லங்களுக்கு வந்து விடுவார்கள். வீடு முழுக்க மகிழ்ச்சியும் காணும் மக்களிடம் மகிழ்ச்சியும் பரவலாக இருக்கும்” என்றார்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மனித மனங்களில் நேர்மையான எண்ணங்களையே உருவாக்குகிறது. அதிலும் ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் சாதி மத பாகுபாடு இன்றி கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவானது, தனக்கானது மட்டுமன்றி தன்னைச் சுற்றி வாழும் அனைவருக்குமான மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய திருவிழா என்பதில் மாற்று கருத்து இல்லை..

- நெல்லை நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com