”திருவலங்காட்டில் வீற்றிருந்து கயிலை வந்தடைவாயாக”-சிலிர்க்க வைக்கும் காரைக்கால் அம்மையாரின் சிவபக்தி

காரைக்கால் அம்மையார் சிவபெருமான் மீது மட்டுமல்ல கணவன் மீதும் அளவுகடந்த பக்தி கொண்டிருந்ததால் தான் தன் கணவர் விரும்பாத உடலை பிரேத உருவமாக மாற்றும் படி சிவபெருமானிடம் வேண்டினாள்.
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்PT

63 நாயன்மார்களில் முக்கியமானவர் காரைக்கால் அம்மையார். இவர் ஒரு பெண். இவரின் வியக்கத்த புராண வரலாறு என்ன என்பதை பார்க்கலாம்.

காரைக்காலில் வணிகர் குலத்தில் பிறந்தவர் புனிதவதி. பேரழகி. இவர் குழந்தையிலிருந்தே சிவபெருமான் மீது தீராத பற்று கொண்டிருந்தார். புனிதவதி இளமை பருவத்தை எட்டியதும் அவளது பெற்றோர்கள் நாகப்பட்டினத்தில் இருந்த பரமதத்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு நாட்கள் நகன்றுக்கொண்டிருந்தது. ஒருநாள் பரமதத்தன், “புனிதவதி, இது எனது நண்பன் வீட்டில் பறித்த மாம்பழம். மிகவும் சுவையானதாக இருக்கும். இதை மதிய உணவில் சேர்த்துக்கொள்” என்று கூறி இரண்டு மாம்பழத்தை அவள் கைகளில் தந்தார்.

மாம்பழத்தை வாங்கி வைத்த புனிதவதி மதிய உணவிற்காக அடுக்களையில் வேலை செய்துக்கொண்டிருந்த சமயம், வாசலில் ”பவதி பிட்சாந்தேஹி” என்ற குரல் வந்த திசையில் திரும்பினாள். ஒரு அந்தணர் பிட்சைக்காக அவள் வீட்டு வாயிலில் நின்றிருந்தார்.

சமையல் முடிந்திராத நிலையில் வந்தவருக்கு என்ன உணவளிப்பது என்று நினைத்த புனிதவதிக்கு கணவர் கொடுத்த மாம்பழம் கண்ணில் பட, அதை அந்தணருக்கு பிட்சையாக இட்டாள். அந்தணரும் அதைப் பெற்றுக்கொண்டு சென்று விட்டார்.

மதிய உணவிற்காக பரமதத்தன் வீட்டிற்கு வந்தான். அவன் உணவருந்திக்கொண்டிருந்த புனிதவதி கணவனுக்கு மீதமிருந்த ஒரு மாம்பழத்தை அரிந்து போட்டாள். அதை சாப்பிட்ட பரமதத்தன், “ஆஹா... மாம்பழம் மிகவும் ருசியாக உள்ளதே.... ஆகையால் மீதமுள்ள அந்த மாம்பழத்தையும் எனக்கு போடு” என்று கூறினான்.

காரைக்கால் அம்மையார்
பன்றிக் கறி படையல்.. இரவில் காவல்; கண்ணை பறித்துக் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் காவிய பக்தி!

புனிதவதிக்கு சங்கடமான சூழல் உருவானது. எப்படி கணவரிடம் ஒரு மாம்பழத்தை அந்தனருக்கு பிட்சை அளித்துவிட்டேன் என்று கூறுவது என்று நெஞ்சம் பதறியபடி சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அவள் மேல் இரக்கம் கொண்ட பெருமான் அவள் கையில் மாங்கனி ஒன்றை தருவித்தார். மனமகிழ்வுடன் அதை கணவருக்கு இட்டாள்.

மாங்கனியின் சுவை வேறுபட்டதை உணர்ந்த பரமதத்தன், “புனிதவதி நீ முன்பு அளித்த மாங்கனியை விட இதன் ருசியானது மிகவும் அருமையானதாக உள்ளதே... இது நான் கொடுத்த பழம் போல் தெரியவில்லையே? இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? ” என்றான்.

புனிதவதி, நடந்த அனைத்தையும் கணவனிடத்தில் சொன்னாள் .

அதை நம்பாத பரமதத்தன். “இதை நான் நம்பமாட்டேன். நீ பொய் உரைக்கிறாய். நீ அத்தனை தெய்வ பக்தி நிரம்பியவளாக இருந்தால் எங்கே.. என் கண் எதிரேயே இன்னொரு பழத்தை தருவித்து கொடு பார்க்கலாம்” என்றான்.

காரைக்கால் அம்மையார்
”சாய்ந்த சிவபெருமான் நிமிர்ந்தது எப்படி?” - வறுமைக்குள் அடங்கிவிடாத குங்கிலிய நாயனாரின் அசராத பக்தி!

கணவனின் சொல்லை மீறாத புனிதவதி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ள, அவளின் கைகளில் மறுபடி ஒரு மாங்கனி வந்தது. இதைக்கண்ட பரமதத்தன் விக்கித்து நின்றான்.

”தெய்வீக சக்தி கொண்ட புனிதவதியாரோடு நான் இல்லறம் நடத்துவது? இது எனக்கு இயலாத காரியம்” என்று நினைத்த பரமதத்தன் அவளிடமிருந்து விலகி வேறொரு பெண்னை மணந்துக்கொண்டு இல்லறம் நடத்தி வந்தான். இச்செய்தி அறிந்த புனிதவதியின் தாய் தந்தையார் புனிதவதியினை அவளது கணவருடன் சேர்த்து வைக்க விரும்பினர். ஆனால் பரமதத்தனோ புனிதவதியோடு சேர்ந்து வாழுவதை விரும்பவில்லை.

மனம் வருந்திய புனிதவதியார், சிவபெருமானிடம் “என் கணவன் விரும்பாத என்பூதவுடலை பிரேத தோற்றத்தை கொண்ட வடிவமாக மாற்றிவிடு” என்று வேண்டிக்கொண்டார். சிவபெருமானும் புனிதவதியாரின் உருவத்தை பிரேத உருவமாக மாற்றினார்.

புனிதவதியார் பிரேத உருவத்திலேயே சிவபெருமானின் மீது பதிகங்கள் ஏற்றினார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.

புனிதவதியாருக்கு சிவபெருமான் வீற்றிருக்கும் திருகயிலைக் காணும் ஆசை உண்டானது. அங்கு செல்ல விரும்பி, கால்களால் நடக்க விரும்பாமல் தலையாலேயே நடந்து திருகயிலை அடைந்தார்.

சிவபெருமானும் புனிதவதியார் தலையால் நடந்து வரும் காரணத்தை கேட்டார்.

“நீங்கள் குடியிருக்கும் இப்புனித இடத்தை அடைய, நான் காலால் நடந்து வந்தால் புனிதமானது கெட்டுவிடும் ஆகவே தான் தலையால் நடந்து வருகிறேன்” என்றார்.

புனிதவதியின் பக்தியை கண்டு மகிழ்சியடைந்த சிவபெருமான், “அம்மையே நான் ஊர்த்துவ தாண்டவம் புரிகின்ற திருவலங்காட்டில் வீற்றிருந்து பதிகங்கள் பாடி, உற்ற நேரத்தில் கயிலை வந்தடைவாயாக” என்று அருள் புரிந்தார்.

புனிதவதியாரும் தலையால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்து அங்கு தங்கி பதிகங்கள் ஏற்றி இறுதியில் சிவபதம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com