பன்றிக் கறி படையல்.. இரவில் காவல்; கண்ணை பறித்துக் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் காவிய பக்தி!

பக்தி என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால், அப்பக்தியானது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தெய்வத்தின் அருளானது நமக்கு கிடைக்கும் என்பதை அறிந்துக்கொள்ள கண்ணப்பநாயனாரின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம்
கண்ணப்ப நாயனார்
கண்ணப்ப நாயனார்PT

பொத்தப்பி என்னும் மலைநாட்டில் வேடர் குலத்தில் பிறந்தவர் தான் திண்ணனார்.. இவர் வேடர் குல தலைவராக இருந்தார். ஆகையால் தினமும் காட்டுக்குச் சென்று அவர் வேட்டையாடி கொண்டு வருவதை தனது நண்பர்களுக்கும் உறவினருக்கும் பகிர்ந்து அளித்து வந்தார்.

ஒரு முறை தனது நண்பர்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். வேட்டையாடி முடித்து மரத்தினடியில் இளைப்பாரும் சமயம் அருகிலிருந்த மலை ஒன்று திண்ணனாரைக் கவர்ந்தது. “இத்தனை நாட்கள் காடுகளில் சுற்றிய எனக்கு இந்த மலை மீது ஏறி பார்க்கத்தோன்றவில்லையே.... அங்கு என்னதான் இருக்கும்? சென்று பார்க்கலாம்” என்று நினைத்தவராய் அம்மலைமீது ஏறிச்சென்றார். அடர்ந்த மரங்களுக்கிடையே மலை மீது ஒரு சிவலிங்கம் இருப்பதைக்கண்டார். ஏனோ அவரை அறியாமல் அச்சிவலிங்கத்தின் மீது அன்பு சுரந்தது.

கண்ணப்ப நாயனார்
”யாராக இருந்தாலும் வெட்டுவேன்” யானையின் தும்பிக்கையை துண்டித்த "எறிபத்த நாயனார்".. ஏன் இத்தனை கோபம்?

அச்சிவலிங்கத்தின் மேல் புதிதாக சாற்றப்பட்ட பூக்களும் இலைகளும் இருந்ததைக்கண்டு ஆச்சர்யம் கொண்ட அவர், “யாரோ சிவனுக்கு தினமும் பூக்களை சாற்றுகின்றனர். ஆனால் உணவு படைக்க தவறியுள்ளனர். இக்காட்டில் தனித்திருக்கும் இவருக்கு பசி எடுக்காதோ” என்று நினைத்தவர், மலையை விட்டு கீழிறங்கி நண்பர்கள் வேட்டையாடி உணவுக்காக சுட்டு வைத்திருந்த பன்றி கறியை எடுத்து சுவைத்துப்பார்த்து அதில் நன்கு சுவையாக இருக்கக்கூடிய பகுதியை கையில் அள்ளிக்கொண்டு, நேராக, அருகில் ஓடிக்கொண்டிருந்த பொன்முகலி என்ற ஆற்றங்கரைக்குச் சென்று நீரை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு சிவலிங்கம் இருக்கும் மலைக்கு ஓடினார்.

வாயில் அடக்கி கொண்டு வந்த தண்ணீரை லிங்கத்தின் மீது உமிழ்ந்து விட்டு, தான் கொண்டு வந்த பன்றிக்கறியை ஆவுடையின் மேல் வைத்துவிட்டு “சாப்பிடு...” என்று கூறியபடி நின்றிருந்த திண்ணனாரை பார்த்த அவரது நண்பர்களுக்கு இவரின் செயல் வேடிக்கையாக இருந்தது.

கண்ணப்ப நாயனார்
”நீ என் அடிமை..” திருமணத்தை நிறுத்திய சிவனடியார்! சிலிர்க்க வைக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு!

ஆனால் திண்ணரின் இந்த நடவடிக்கையானது தினமும் தொடர்ந்தது. நாளாக நாளாக சிவன் மேல் தீராத பற்றையும் கொண்டிருந்தார். இரவில் சிவபெருமான் தனித்திருப்பதால் கொடிய விலங்குகளால் அவருக்கு ஏதேனும் அச்சம் நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சியவர் சிவபெருமானுக்கு காவலாக அந்த இடத்திலேயே இருந்தார். விடிந்ததும் தன் வீடு போய் சேர்வார்.” இது இப்படி இருக்க...

தினமும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பூக்களை சமர்ப்பணம் செய்து வந்த வேதியர் ஆவுடையின் மீது பன்றி கறி இருப்பதைப் பார்த்து, ” தினமும் யார் வந்து சிவபெருமானுக்கு இந்த பன்றி கறியை வைத்து செல்வது?, என்று துடித்தவராய் , சிவனிடம் முறையிட்டார். “பெருமானே... தினமும் நான் உனக்கு வந்து அபிஷேகம் ஆராதனை செய்கிறேன். ஆனால் உன்னை பிடிக்காதவர் எவரோ ஒருவன் இவ்வாறு மாமிசம் படைக்கும் செயலை செய்துக்கொண்டிருக்கிறான். அவனை நீர் தான் தண்டிக்கவேண்டும் . என்றார்.

அன்றிரவு வேதியரது கனவில் தோன்றிய சிவபெருமான்” வேதியரே உன்னைப்போல் அவனும் என் பக்தனே... அவனுக்கு தெரிந்த வகையில் அவன் என்மீது அலாதி பக்திக்கொண்டு என்னை பூஜிக்கின்றான். இதில் தவறு ஏதும் இல்லை. அவனின் அன்பை நான் உனக்கு உணர்த்துகிறேன். இன்றிரவு என் இருப்பிடம் வந்து மறைந்து நின்று நடப்பதை கவனி” என்று கூறி மறைந்தார்.

கண்ணப்ப நாயனார்
காஞ்சிபுர விண்ணகர கோவிலுக்கும் அங்கோவார்ட் கோவிலுக்கும் என்ன ஒற்றுமை?

வேதியரும் சிவபெருமானின் கூற்றுப்படி அன்று இரவு சிவலிங்கத்திற்கு அருகில் இருக்கும் மரத்தின் பின்னால் ஒளிந்தப்படி நடக்க இருப்பதை கவனித்துக்கொண்டிருந்தார்.

வழக்கம்போல் கையில் மாமிசத்துடனும் வாயில் நீருடனும் வந்த திண்ணனார் தன் வாயிலிருந்த நீரை சிவபெருமான் மீது துப்பும் சமயத்தில் தான் சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து இரத்தம் வருவதை கவனித்தார். இதைக் கண்ட திண்ணனாரின் மனமானது பதறியது. “ ஐயோ... இப்படி சிவபெருமானின் கண்களிலிருந்து இரத்தம் வடிகிறதே இதற்கு காரணம் யாராக இருக்கக்கூடும்? என்று பதறியவர், ஒரு கணமும் யோசிக்காமல் தன் அம்பை எடுத்து தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமானின் கண்களில் பொருத்தினார். அப்பொழுது சிவபெருமானின் கண்களிலிருந்து இரத்தம் வடிவது நின்றது. ஆனால் சிறிது நேரத்தில் சிவபெருமானின் அடுத்த கண்களிலிருந்து இரத்தம் வடிவதைக்கண்ட திண்ணனார், சிறிதும் யோசிக்காமல் தனது இரண்டாவது கண்ணையும் தோண்டி எடுக்க நினைத்தவர், தனது பார்வையானது பறிபோனாலும் சிவனுக்கு இன்னொரு கண்ணை சரியான இடத்தில் பொருத்த முடியாது என்றி நினைத்தவர், தனது காலின் கட்டை விரலால் சிவபெருமானின் கண்களை அடையாளப்படுத்திக்கொண்டு தனது மறு கண்ணையும் தோண்டி எடுக்க நினைத்த சமயம் ,“ திண்ணனாரே நில்...” என்று அசரீரி ஒலித்தது. அச்சமயம் சிவபெருமான் திண்ணனாரின் முன் தோன்றி, “திண்ணனாரே... உனது பக்தியை கண்டு பிரமித்துவிட்டேன். உனது பார்வை போனாலும் பரவாயில்லை என்று நினைத்து உன் கண்களை எனக்கு தர நினைத்த நீ இன்றிலிருந்து நீ கண்ணப்பன் என்று அழைக்கப்படுவதுடன் எப்பொழுதும் நீ என் அருகினிலேயே இருப்பாய்” என்று அவருக்கு சிவபதத்தை அளித்தார்.

இதை மறைந்து இருந்து பார்த்த வேதியரும் கண்ணப்பரின் பக்தியை நினைத்து பிரமிப்பு அடைந்ததுடன், கண்ணப்ப நாயனாரின் அருளையும் பெற்றார்.

சிவபெருமானுக்கு தனது கண்களையே தந்ததால் திண்ணனார் கண்ணப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

கண்ணப்ப நாயனார்
”நெஞ்சில் கத்தி வாங்கிய நேரத்திலும் குன்றாத பக்தி” - மெய்ப்பொருள் நாயனாரின் வாழ்க்கை வரலாறு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com