”சாய்ந்த சிவபெருமான் நிமிர்ந்தது எப்படி?” - வறுமைக்குள் அடங்கிவிடாத குங்கிலிய நாயனாரின் அசராத பக்தி!

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள். நம்மைச்சுற்றி நடக்கும் நல்லது, கெட்டது என்ற அனைத்து காரணங்களுக்குப் பின்னாடி ஒரு காரியமானது கண்டிப்பாக இருக்கும். அதே போல் தான் தாடகையினால் சற்று தலையை கவிழ்ந்துக்கொண்ட சிவபெருமான் யாருக்காக நிமிர்ந்தார்?
குங்கிலிய நாயனார்
குங்கிலிய நாயனார்PT

திருக்கடவூர் என்னும் ஊரில் கலயனார் என்று ஒருவர் இருந்தார். இவர் சிறந்த சிவ பக்தர். தினமும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியால் குங்கிலியம் என்ற வாசனை பொருளைக் கொண்டு சிவனுக்கு தூபமிட்டு தொண்டாற்றி வந்ததால், அங்கிருந்த மக்கள் இவரை குங்கிலிய கலயனார் என்று அழைத்து வந்தனர்.

இவரின் பக்தியை உலகறிய செய்திட வேணும் என்று சிவபெருமான் எண்ணினார். அதனால் தனது திருவிளையாடலை ஆரம்பித்தார்.

தினமும் அவர் குங்கிலியம் வாங்குவது சிவபெருமானுக்கு தூபமிடுவது என்றிருந்த இவரின் செல்வமானது சிறிது சிறிதாக கரையத்தொடங்கியது. இருப்பினும் தனது பொன் பொருளை விற்று குங்கிலியத்தூபமிடும் வேலையை இவர் நிறுத்தாமல் செய்து வந்தார். கடைசியாக இவரின் மொத்த செல்வமும் அழிந்து அடுத்த வேளை குங்கிலிய தூப ஆராதனைக்கு கையில் பணமில்லை.

கவலையுடன் வீட்டிற்கு வந்தவருக்கு, கலையனாரின் மனைவி அவரிடத்தில் தனது மாங்கல்யத்தை தந்து, “இதை விற்று பணமாக்கி கொண்டு வாருங்கள் அப்பொழுது தான் நான் குழந்தைகளுக்கு அமுது படைக்க முடியும் வீட்டில் ஒரு பிடி நெல் கூட இல்லை” என்றாள்.

“சரி” என கலையனாரும் சிறிது மன சங்கடத்துடன் நகையை விற்று பணமாக கொண்டு வரும் வழியில் குங்கிலியம் விற்பவர் எதிரே வந்தார். பின்னர் சிவனுக்கு குங்கியம் வாங்கிக்கொண்டு சிவபெருமான் சன்னதிக்கு சென்று குங்கலிய தூபமிட்டு அவரை தரிசனம் செய்வதில் நேரத்தை செலவழித்ததால் அவருக்கு தனது குடும்பத்தைப்பற்றி நினைவு வரவில்லை.

கலையனாரின் மனைவியும் குழந்தைகளும் கலையனாரின் வரவை எதிர்ப்பார்த்தபடியே பசியுடன் உறங்கிவிட்டனர். இவர்களின் இந்நிலையை கண்ட சிவபெருமான் தனது அருளால் கலையனாரின் வறுமையை போக்கும் பொருட்டு பொன்னாலும் பொருளாலும் வீட்டை நிரப்பச்செய்தார். பிறகு அவரது மனைவியாரின் கனவில் தோன்றிய சிவபெருமான், என் அடியவரை சோதனை செய்வேன் ஆனால் கைவிடமாட்டேன். இனி உங்கள் வறுமை நீங்கி என்றும் மகிழ்சியாக இருப்பீர்களாக....” என்று அருளாசி வழங்கினார்.

இக்கனவை கண்டதும் திடுக்கிட்டு முழித்த கலையனாரின் வீடு முழுவதும் நிரம்ப செல்வங்களும் பொருட்களும் இருப்பதைக்கண்ட அவரது மனைவி இச்செய்தியை தனது கணவருக்கு தெரிவிக்கும் பொருட்டு அவரை தேடிச்சென்று விஷயத்தைக் கூறினாள். கலையனாரும் அவரது மனைவியும் அச்செல்வத்தைக்கொண்டு மறுபடியும் குங்கிலியத்தூபத் தொண்டினையும், சிவனடியவருக்கு அமுதூட்டும் தொண்டினையும் செய்து மன மகிழ்சியுடன் செய்து வந்தனர்.

தாடகை இவள் ஓர் அசுரனின் மகள். ஆனால் தீவிர ஒரு சிவபக்தை. தினந்தோறும் சிவபெருமானுக்கு மாலை சூட்டி அழகுபார்ப்பது இவளின் செயல். அப்படி ஒருநாள் அவள் சிவபெருமானுக்கு மாலை அணிவிக்கும் பொழுது அவளது மேலாடை நழுவியது. ஒருகையில் மேலாடையை பிடித்தபடி மறுகையில் மாலையை பிடித்தப்படி வெட்கம் தாளாது, அவள் நாணமுற.. அவள் வெட்கத்தையும் துயரத்தையும் கண்ட சிவபெருமான் தனது திருமேனியை சற்றே சாய்த்துக்கொண்டு அவள் அவள் அளித்த மாலையை வாங்கிக்கொண்டதினால் தான் சிவலிங்கமானது சாய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஒரு சமயம் திருப்பனந்தாள் என்னும் ஊரில் இருந்த சிவ ஆலயத்தின் சிவலிங்கமானது திடீரென சாய்ந்தது. அதனை நிமிர்த்த முயன்று பலரும் தோல்வியுற்றனர். அவ்வூரின் மன்னன், தனது பலத்தாலும் யானையைக் கொண்டு அதன் பலத்தாலும் அச் சிவலிங்கத்தை எழுப்ப முயன்றார். ஆனாலும் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இச்சமயத்தில் மந்திரி ஒருவன் கலையநாரின் சிவபக்தியையும் சிவபெருமானின் அருளால் அவன் பெற்ற செல்வ செழிப்பை பற்றியும் எடுத்துக்கூறி, இவர் நினைத்தால் சிவபெருமானை நிமிர்த்தி வைக்க இயலும் என்று கூறவும், கலையநாரை அழைத்து வர மன்னர் ஏற்பாடு செய்தான். மன்னனின் வருத்தத்தை கேள்விபட்ட கலயனார், திருப்பனந்தாள் சென்று சிவலிங்கத்தின் மீது ஒரு கயிற்றையும் மறு முனையை தனது கழுத்திலும் கட்டிக்கொண்டு சிவலிங்கத்தை இழுத்தார். என்ன அதிசயம்?... மறுகணமே சிவலிங்கம் நிமிர்ந்தது.

மகிழ்சியடைந்த மன்னர் கலயனாரை வணங்கி அவரின் பெருமையை ஊரறிய செய்தார். அதிலிருந்து அவர் குங்கிலியநாயனாராக அறியப்படுகிறார். குங்கிலிய நாயனாரைத்தேடி திருக்கடவூருக்கு திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் வந்திருந்து அவரை வணங்கிச்சென்றனர். இறுதியில் சிவதொண்டை விடாது செய்து வந்த குங்கலியநாயனார் சிவபதம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com