இந்தியாவின் ஐவிஎஃப் தலைநகராக உருவெடுத்த தமிழ்நாடு., 669 ஐவிஎஃப் மையங்களுடன் முதலிடம்!
IVF Clinic எனப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக செயற்கைக் கருத்தரிப்பு மற்றும் வாடகைத் தாய் வழிமுறைப் பதிவேட்டின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2026 ஜனவரி நிலவரப்படி, இந்தியாவில் 2650 பதிவுசெய்யப்பட்ட ஐவிஎஃப் கிளினிக்குகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 669 ஐவிஎஃப் மையங்கள் உள்ளன; இரண்டாம் இடத்தில் உள்ள குஜராத் மாநிலத்தில் 361 ஐவிஎஃப் கிளினிக்குகள் உள்ளன. தெலங்கானாவில் 276, கர்நாடகாவில் 216 மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 203 ஐவிஎஃப் கிளினிக்குகள் உள்ளன.
தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளதே இம்மையங்கள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு பெண் தன் மகப்பேறு வயதில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார் என்பதன் சராசரி எண்ணிக்கையே கருவுறுதல் விகிதம் ஆகும். டெல்லி, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைவாக இருந்தபோதிலும் ஐவிஎஃப் கிளினிக்குகள் தமிழ்நாட்டைவிட ஐந்தில் ஒரு பங்குக்குக் குறைவாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்பதும் வேலைக்குச் செல்வதும் அதிகரித்துள்ளது. கல்வி மற்றும் பணியில் பெண்கள் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் திருமணம், மகப்பேறு ஆகியவற்றை தள்ளிவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால், செயற்கைக் கருத்தரிப்பு வழிமுறைகளின் தேவை அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகக் கல்வி அறிவு பெற்றவர்கள், கருவுறுதல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தயக்கமின்றி நவீன மருத்துவச் சிகிச்சைகளை நாடுவதும் IVF மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்குக் காரணமாகும்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு மேம்பட்டிருப்பதால் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு பலரும் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். இதுவும் ஐவிஎஃப் கிளினிக்குகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்குப் பங்களித்துள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் மருத்துவம் மிகவும் வணிகமயமாகியிருப்பதும் காரணம் என்று கூறப்படுகிறது.

