இந்தியாவில் அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்.. மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு!
இந்தியப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பு ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து வருவதாக ஐ.சி.எம்.ஆர். ஆய்வு கூறுகிறது.
இந்தியப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பு ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து வருவதாக ஐ.சி.எம்.ஆர். ஆய்வு கூறுகிறது. இதற்குப் போதிய உறக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவை முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆழ்ந்த உறக்கம் ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உறக்கம் தடைபடும்போது மெலடோனின் சுரப்பு குறைந்து புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என்றும் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை உயர்த்தி புற்றுநோய் செல்கள் வளரச் சாதகமான சூழலை உருவாக்குகிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீண்டகால மன அழுத்தம் 'கார்டிசோல்' (Cortisol) அளவை உயர்த்தி, உடலில் வீக்கங்களை உண்டாக்குகிறது. இது புற்றுநோய் செல்களை அழிக்கும் உடலின் இயல்பான திறனைக் குறைக்கிறது. தற்போது 35 முதல் 50 வயதுடைய பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் கண்டறியப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவறான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முறையான பரிசோதனைகள், தாய்ப்பால் அளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் இந்த அபாயத்தைப் பெருமளவு குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

